சில ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை, சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் தொடரும் - கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

சில ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை, சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் தொடரும் - கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூறுவீதம் துறைமுக அதிகார சபைக்கு உரித்தாகும் என பிரதமர் உறுதியளித்தாலும் அமைச்சரவையின் உத்தியோகபூர்வ தீர்மானம் கிடைக்கும் வரை துறைமுக ஊழியர்களின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், காெழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் துறைமுக ஊழியர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வை சந்திந்து இன்று கலந்துரையாடினோம்.

பேச்சுவார்த்தையில் கிழக்கு முனையத்தின் நூறுவீத அதிகாரம் துறைமுக அதிகார சபைக்கே சொந்தமாகும். அதனை யாருக்கும் வழங்கமாட்டோம் என்ற உறுதியை பிரதமர் வழங்கினார்.

என்றாலும் இது தொடர்பாக அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, அமைச்சரவையில் அது தொடர்பாக தீர்மானிக்கும் என்றார்.

பிரதமரின் வாக்குறுதியை நாங்கள் நம்புகின்றோம். என்றாலும் அமைச்சரவையின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை சட்டப்படி வேலை செய்யும் ஊழியர்களின் போராட்டம் தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நாங்கள் பிரதமருக்கு அறிவித்தோம்.

என்றாலும் பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து துறைமுக ஊழியர்களின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் கைவிடப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. அதில் எந்த உண்மையும் இல்லை. அமைச்சரவையின் உத்தியோகபூர்வ தீர்மானம் இன்று வெளியிடப்படும். அதன் பின்னரே எமது நிலைப்பாட்டை நாங்கள் அறிவிப்போம். 

அத்துடன் கிழக்கு முனையம் தொடர்பாக தன்னுடன் யாரும் கதைக்கவில்லை என பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் கிழக்கு முனையம் தொடர்பாக பிரதமருக்கு ஏற்கனவே நாங்கள் எழுத்து மூலம் அறிவித்திருந்தோம்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்த நாட்டு மக்களின் பெரும் சொத்து. அதனை விற்கவோ முதலீடு செய்யவோ யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. அதனால் மக்களின் உணர்வுகளை மதித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment