ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளராக வர்த்தகப் பிரமுகர் எம்.எஸ். நழீம் தெரிவானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளராக வர்த்தகப் பிரமுகர் எம்.எஸ். நழீம் தெரிவானார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையில் ஏற்பட்டுள்ள தவிசாளர் வெற்றிடத்தினை நிவர்த்திக்கும் வகையில் புதிய தவிசாளர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் முன்னிலையில் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் வியாழக்கிழமை 11.02.2021 நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.

இவ்வேளையில் வர்த்தகப் பிரமுகரான எம்.எஸ். நழீம் என்பவர் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தில் 7 உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்களைத் தெரிவு செய்வதற்காக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் 2021.01.29ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையிலேயே வியாழக்கிழமை இந்த தெரிவு இடம்பெற்றது.

ஏறாவூர் நகர சபையில் அனைத்து கட்சிகள் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் 17 பேர் உள்ள நிலையில் வியாழக்கிழமை இடம்பெற்ற தலைவர் தெரிவுக்கு நகர சபையின் முன்னாள் தவிசாளரான இறம்ழான் அப்துல் வாஸித் உட்பட 6 உறுப்பினர்கள் சமுகமளிக்காத நிலையில் தெரிவு இடம்பெற்றது.

இவ்வேளையில் இந்நகர சபைக்குத் தலைவராகத் தெரிவு செய்வதற்கான பெயர்களை முன்மொழியுமாறு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் கேட்டுக் கொண்டபொழுது நழீம் என்பவரின் பெயர் மாத்திரமே முன்மொழியப்பட்டது.

நகர சபை உறுப்பினரான எம்.எஸ். சுபைர் அப்பெயரை முன்மொழிய பிரதித் தவிசாளரான எம்.எல். றெபுபாசம் அதனை வழிமொழிந்தார்.

இந்நிலையில் வேறு பெயர்கள் பிரேரிக்கப்படாததால் நழீம் என்பரே தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன் பிரகடனப்படுத்தினார்.

ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளரான இறம்ழான் அப்துல் வாஸித் என்பவர் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை இருமுறை சபையில் சமர்ப்பித்த வேளையில் அது சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டதையடுத்து தலைவர் பதவி கடந்த டிசெம்பெர் 31ஆம் திகதியுடன் வறிதானதாக கிழக்கு மாகாண ஆளுநர் வர்த்தமானி மூலம் பிரகடனப் படுத்தியிருந்தார்.

அதேவேளை பின்னர் தவிசாளர் மீதான விசாரணைகள் முடியும் வரை அச்சபையின் பிரததித் தவிசாளரிடம் பொறுப்புக்கள் ஒப்படைப்பதாக ஆளுநர் வர்த்தமானி வெளியிட்டு பின்னர் தன்னால் முன்னதாக வெளியிடப்பட்ட கட்டளையைத் தான் இரத்துச் செய்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அதி விசேஷ வர்த்தமானப் பத்திரிகை மூலம் அறிவித்திருந்தார்.

இந்த நிலைமைகளுக்கு மத்தியில் தற்போது புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை முன்னாள் தவிசாளரான அப்துல் வாஸித் தான் நகர சபைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சம்பந்தமாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment