தஞ்சையில் சசிகலா உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2017 இல் உச்ச நீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதியானது.
இந்த சிறைத் தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி விடுதலையாகினர். சுதாகரன் இன்னமும் அபராதத் தொகையை செலுத்தவில்லை. அபராதத் தொகையை சுதாகரன் செலுத்தி விட்டால் அவரும் சிறையில் இருந்து விடுதலையாவார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பலவற்றை தமிழக அரசு அதிரடியாக பறிமுதல் செய்தது.
இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துகள் இரு தினங்களுக்கு முன்னர் அரசுடைமையாக்கப்பட்டன, சென்னை டி.டி.கே சாலையிலுள்ள ஒரு சொத்தும், சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள ஐந்து சொத்துகளும் அரசின் சொத்தாக உரிமை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 'சொத்துக் குவிப்பு வழக்கின் மேன்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், சென்னை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான ஆறு சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சொத்துகள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சொத்தில் கிடைக்கும் வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்குச் சொந்தம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இளவரசி, சுதாகரன் சொத்துக்களை முடக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு பகுதியில் சசிகலாவின் உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான 144.75 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தற்போது மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்துள்ளது. இதனை தமிழ் நாடு அரசின் சொத்து என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாயன்று தஞ்சை வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள 26,540 சதுர அடி காலி மனையை அரசு பறிமுதல் செய்துள்ளது. இது அரசுடமையாக்கப்பட்டது. இனி அதிலிருந்து வரக்கூடிய வாடகை நிலுவைத் தொகை ஆகியவை அரசுக்கு சொந்தமாகும். இந்த சொத்து கடந்த 1995 ஆம் ஆண்டு 11 இலட்சத்திற்கு வாங்கப்பட்டது.
No comments:
Post a Comment