திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பிலான, பாதாள குழு தலைவர்களில் ஒருவரான, கிம்புலா எலே குணா என அழைக்கப்படும் சின்னையா குணசேகரன் உள்ளிட்ட நால்வர் இந்தியாவின் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குணா மற்றும் அவரது மகன் மற்றும் 'பும்மா' என அழைக்கப்படும் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொள்வதில் பிரபல்யமான பாதாள குழு உறுப்பினர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அவர்களை மிக விரைவில் இலங்கைக்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 1999ஆம் ஆண்டு, கொழும்பு நகர சபையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவை இலக்குவைத்து விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய குற்றங்கள் தொடர்பில், சின்னையா குணசேகரனுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குணா உள்ளிட்ட நால்வரை சென்னை விமான நிலையத்தில் அந்நாட்டு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லிக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்த நிலையில், பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான சென்னை கியூ பிராஞ்ச் விசேட பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவினா் மற்றும் மத்திய உளவுத்துறையினர் விசேட அனுமதியின் அடிப்படையில், குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.
இதில் டெல்லி விமானத்தில் செல்ல இருந்த 45 வயதான கிம்புலா எலே குணா என அழைக்கப்படும் சின்னையா குணசேகரன் என்பவரை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் அவரது விமான பயணத்தை இரத்து செய்து, சென்னையில் உள்ள கியூபிராஞ்ச் தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன்போது குணசேகரனிடம் மேற்கொண்ட விசாரணைகளில், அவர் இலங்கையை சோ்ந்தவர் என தெரிய வந்துள்ளதோடு, அவரது மகன் மற்றும் பும்மா, கென்னடி என்பவர் உள்ளிட்ட மூவரை, மத்திய உளவுத்துறை பொலிசார் கைது செய்து கியூ பிராஞ்ச் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையில் இவர்கள் 4 பேரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருப்பதாகவும், இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவா்கள் என்றும் தெரிய வந்துள்ளதோடு, இவர்கள் இலங்கையில் போதை பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கைதான நால்வருக்கும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில், இரகசிய இடத்தில் வைத்து கியூ பிராஞ்ச் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment