வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை இலவசமாக நாட்டிற்குள் வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை இலவசமாக நாட்டிற்குள் வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? - சஜித் பிரேமதாச

(ஆர்.யசி)

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை இலவசமாக நாட்டிற்குள் வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். எனினும் பாராளுமன்ற விதிமுறைகளை மீறி எதிர்க்கட்சி தலைவர் செயற்படுவதாக ஆளும் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, சபை ஒத்தி வைக்கப்படும் வேளையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அவர் இதன்போது கூறுகையில், நாற்பதாயிராத்திற்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் அனாதரவாகியுள்ளனர். அவர்களை நாட்டிற்கு மீண்டும் வரவழைப்பதில் அதிகளவில் பணம் அறவிடப்படுகின்றது. விமானச் சீட்டுக்கும், தனிமைப்படுத்துவதாக கூறி ஹோட்டல்களுக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும், பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குமென அவர்களிடமிருந்தே அறவிடப்படுகின்றது.

இப்போது வரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் 14 பில்லியன் ரூபா சேமிப்பில் உள்ளது. இந்த பணத்தை செலவு செய்து எமது மக்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்துவர ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் எமது மக்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை செலவு செய்து நாட்டிற்கு வரவேண்டியுள்ளது என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எதிர்க்கட்சி தலைவர் எந்தவித நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடங்காத ஒரு விடயம் குறித்து சபையில் பேசிக் கொண்டுள்ளார். சபை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சபை விதிமுறைகளை மீறி செயற்பட்டு வருகின்றார் என எதிர்க்கட்சி தலைவருடன் வாக்குவாதப்பட்டார். 

இதனால் எதிர்க்கட்சி தலைவரும் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment