ஏ.எச்.ஏ. ஹுஸைன்
எனது தலைமையிலான நிருவாகத்தின் கீழ் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அணுகப்படும் எந்த விடயத்தையும் இந்த சபையில் தீர்மானமாகக் கொண்டுவர நான் அனுமதியேன் என ஏறாவூர் நகர சபையின் புதிய தலைவர் எம்.எஸ். நழீம் சூளுரைத்தார்.
புதிய தலைவரின் கீழ் ஏறாவூர் நகர சபையின் 35ஆவது மாதாந்த சபை அமர்வு வியாழக்கிழமை 25.02.2021 நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது அச்சபையின் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் 16 பேர் சமூகமளித்திருந்தனர்.
ஆரம்பத்தில் வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் சபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டு சபை அரை மணி நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சபையின் 34ஆவது அமர்வில் பிரதித் தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது ஏறாவூர் நகர சபையில் இயங்கி வரும் விவசாய விரிவாக்கல் அலுவலகத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும் என ஏறாவூர் சபையின் முன்னாள் தலைவர் ஐ. அப்துல் வாஸித் வாதிட்டார். இதன்போதே சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
எனினும் சபை சடுதியாக அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டு அந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்படுவதாக சபை முதல்வர் நழீம் அறிவித்ததும் சபை நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றன.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய புதிய நகர சபைத் தலைவர் நழீம் இந்த சபையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளை மறந்து மக்கள் நலன் கருதி மாத்திரம் செயலாற்ற வேண்டும் என்பதே எனது அவாவாகும்.
அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சமர்ப்பிக்கப்படும் எந்த விடயத்தையும் இந்த சபையில் தீர்மானமாகக் கொண்டு வர நான் ஒரு போதும் அனுமதியேன்.
கௌரவ உறுப்பினர்கள் மக்கள் நலன் கருதி மாத்திரம் செயற்பட வேண்டும். நாம் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளால் ஏனைய அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள உறுப்பினர்களோ உத்தியோகத்தர்களோ அல்லது மக்களோ பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
அதேபோன்று ஏனைய உறுப்பினர்களும் இருந்து கொண்டால் இந்த நகர சபைப் பிரதேசத்தை அபிவிருத்தியை நோக்கி நகர்த்தலாம்” என்றார்.
புதிய நகர சபைத் தலைவரால் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமும் கடந்த சபை அமர்வுக் கூட்ட அறிக்கையும் உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நகர சபைச் செயலளார் எம்.ஆர். சியாஹுல்ஹக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment