வட மாகாண சபையின் விவசாய, உள்ளூராட்சி அமைச்சுக்களின் கீழ் வரும் சில திணைக்களங்களை மாங்குளம், கிளிநொச்சி பிரதேசங்களுக்கு மாற்ற ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

வட மாகாண சபையின் விவசாய, உள்ளூராட்சி அமைச்சுக்களின் கீழ் வரும் சில திணைக்களங்களை மாங்குளம், கிளிநொச்சி பிரதேசங்களுக்கு மாற்ற ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நடவடிக்கை

(எம்.நியூட்டன்)

வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சின் கீழ் வரும் விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் வரும் காணித் திணைக்களம் என்பவற்றை மாங்குளம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு இடமாற்றுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் என வடக்கின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆளுநர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விவசாய அமைச்சின் கீழ் வரும் விவசாயத் திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் என்பவற்றை மாங்குளம் பகுதிக்கு இடமாற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதன் மூலம், அதிகளவு விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி நடைபெறும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் அதிக பயனடையக் கூடியதாக இருக்கும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்

இதேபோல், உள்ளூராட்சி அமைச்சின் கீழ் வரும் மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் கிளிநொச்சிக்கு இடமாற்றப்படவிருப்பதாகக் தெரிவிக்கும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அதிகளவு காணி தொடர்பான பிணக்குகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே காணப்படுவதால், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வசதியாக இந்த முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட காலம் முதல் அதன் கீழ் வரும் அனைத்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே செயற்பட்டு வருகின்றன. 

இதனால், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மாகாண சபை மூலமான தேவைகளை நிறைவேற்ற யாழ்ப்பாணத்துக்கே வர வேண்டியிருந்தது.

இப்போது ஆளுநர் சார்ள்ஸ் எடுத்திருக்கும் முடிவின்படி, வடக்கின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் மாகாண சபை நிர்வாகத்தை சம அளவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

வடக்கு மாகாண சபை, வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் மையமாக விளங்கும், மாங்குளம் பிரதேசத்திலேயே அமைய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக பல தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad