பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுக்க விசேட வேலைத்திட்டம் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுக்க விசேட வேலைத்திட்டம் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி)

பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகுவதை தடுப்பதற்கான திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

நாட்டில் தற்போது 90 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களின் தொகை படிப்படியாக அதிகரித்துச் செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இந்த நிலைமைக்கு பிரதான காரணம் இளம் வயதினர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றமையே.

இந்நிலையில் இளம் வயதினரை போதைப் பொருள் பாவனையிலிருந்து மீட்பதென்றால், பாடசாலை மட்டத்திலிருந்தே அவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலை மட்டத்தில் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த முடிவெடுத்துள்ளது.

இதன்போது இந்த செயற்பாடுகளுக்கு சாரணியர் அமைப்பினரும், இலங்கை செஞ்சிலுவை அமைப்பினரும் மற்றும் தேசிய மாணவர் படையணியும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அத்மிரால் சரத் வீரசேகர தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ், லிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, கல்வி அமைச்சின் உறுப்பினர்கள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர், சாரணியர் அமைப்பினர் மற்றும் தேசிய மாணவர் படையணியினரும் இணைந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad