(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்பதற்கோ, குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாது. தேசிய வளங்களை பாதுகாப்போம் என கூட்டணியமைத்து நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளோம். வாக்குறுதிகளை மீறுவது மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிச கட்சி ஆகியன ஒன்றினைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டன. இதன்போதே பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வியாபார நவடிக்கைகளுக்காக கூட பிற நாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தேசிய வளத்தின் ஊடாக நாட்டு மக்கள் மாத்திரம் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றோம். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையான அபிவிருத்தி செய்யும் பொறுப்பினை துறைமுக அதிகார சபை ஏற்க வேண்டும் அதற்கான வளங்கள் தேசிய மட்டத்தில் காணப்படுகின்றன.
1320 மீற்றர் நீளமான கிழக்கு முனையத்தில் 420 மீற்றர் நீளத்தை தேசிய பொறியியலாளர்கள் அபிவிருத்தி செய்துள்ளார்கள். ஆகவே மிகுதி பரப்பை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை பிற நாட்டுக்கு வழங்க வேண்டிய தேவை கிடையாது.
இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு முனையத்தை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியிலும், முதலாளிமார் வர்க்கத்திலும் இந்நிறுவனம் தொடர்பில் சாதகமான அபிப்ராயம் கிடையாது.
ஆகவே எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. தேசிய வளங்களை விற்கமாட்டோம். அவற்றை பாதுகாப்போம் என நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியுள்ளோம்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு புறம்பாக செயற்பட இடமளிக்க முடியாது. அரசாங்கத்துடன் கூட்டணியமைத்துள்ள காரணத்தினால் எமது கட்சியின் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment