(எம்.மனோசித்ரா)
2021 ஆம் ஆண்டு 2020 ஐ விட மோசமானதாக அமையும் என்பவற்றுக்கான அறிகுறியாக ஜனவரி மாதத்தில் மாத்திரம் சுமார் 20,000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேநிலைமை தொடருமாயின் 2021 ஆம் ஆண்டும் மோசமானதாகவே அமையும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
எனினும் நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கும் செய்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட அவரிடமிருந்து ஏனையோருக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்பதோடு, மரணங்களின் எண்ணிக்கையும் பாரியளவில் குறைவடையும் என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், வைரஸ் தொற்று மேலும் வேகமாக பரவாதிருப்பதற்கு பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதோடு 7 - 8 மணித்தியாலங்களில் அதன் முடிவுகள் கிடைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் தொற்று பரவல் வேகமாக அதிகரிக்கக் கூடும்.
நாட்டில் தற்போது சுமார் 40,000 இற்கும் அதிகமான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து 22,000 இற்கும் அதிகமான நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பில் விஷேட கண்காணிப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு 3 - 4 நாட்கள் கால தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும்.
ஜனவரியில் மாத்திரம் 20,000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது நாளொன்றுக்கு சுமார் 800 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை தொடருமாயின் பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 25,000 - 30,000 தொற்றாளர்கள் இனங்காணப்படக்கூடும். இதே நிலைமை தொடருமாயின் 2020 ஐ விட 2021 மிக மோசமானதாக மாறிவிடும்.
எனினும் தற்போது தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ள ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அது பாரிய அச்சுறுத்தலாக அமையாது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இவர்களிடமிருந்து வைரஸ் ஏனையோருக்கு பரவும் வீதமும் மரணங்கள் எண்ணிக்கையும் குறைவாகும். எனவே சரியான முறையில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின் 2020 ஐ விடவும் 2021 ஐ சிறப்பான வருடமாக மாற்றியமைக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment