விமல் வீரவன்சவின் செயற்பாடு கவலைக்குரியது, எவரின் அச்சுறுத்தலுக்கும், அழுத்தங்களுக்கும் ஜனாதிபதி அடிபணிய மாட்டார் - பொதுஜன பெரமுன - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

விமல் வீரவன்சவின் செயற்பாடு கவலைக்குரியது, எவரின் அச்சுறுத்தலுக்கும், அழுத்தங்களுக்கும் ஜனாதிபதி அடிபணிய மாட்டார் - பொதுஜன பெரமுன

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ள பங்காளி கட்சிகள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அமைச்சர் விமல் வீரவன்சவின் செயற்பாடு கவலைக்குரியது. சமூகத்தின் மத்தியில் வீரன்போல கருத்துரைப்பவர்களின் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் அடிபணியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2020ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த அரசாங்கத்தையே பொறுப்பேற்றோம். கொவிட்-19 வைரஸ் தாக்கம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தியது. சிறந்த திட்டமிடலுக்கு அமைய பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அரசாங்கம் கடந்த வருடத்தில் இருந்து பாரிய நிதி செலவிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. கிழக்கு முனையத்தின் 49 சதவீத உரிமத்தை இந்திய நிறுவனத்தக்கு வழங்குவது குறித்து தீர்மானம் ஏதும் எடுக்கவில்லை. யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டது.

இவ்விடயத்தை கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் பிரசாரங்களை அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுத்தார்கள். ஆளும் தரப்பின் உறுப்பினர்களும் அதற்கு சார்பாகவே செயற்பட்டார்கள்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச 10 கட்சிகளை ஒன்றினைத்து செயற்பட்ட விதம் மற்றும் ஊடகங்களுக்கு குறிப்பிட்ட செய்தி முற்றிலும் தவறானது. 

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணி அமைத்துள்ளவர்கள் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசாங்கத்துக்குள் பேச வேண்டிய விடயத்தை சமூகத்தின் மத்தியில் செயல் வீரன் போல் பேசுவதால் எவ்வித பயனும் ஏற்படாது.

எவரின் அச்சுறுத்தலுக்கும், அழுத்தங்களுக்கும் ஜனாதிபதி அடிபணிய மாட்டார். பேச்சு சுதந்திரம் காணப்படுகிறது என்பதற்கான கட்சியின் கொள்கைக்கு புறம்பாக செயற்பட முடியாது. ஆகவே அமைச்சர் விமல் வீரவன்ச செயற்பட்ட விதம் கவலைக்குரியது என்றார்.

No comments:

Post a Comment