1000 ரூபா சம்பள உயர்வு கோரி வேலை தவிர்ப்பு போராட்டம், நாடளாவிய ரீதியில் 05ஆம் திகதியன்று ஏற்பாடு - இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கங்களை விட அதிக முயற்சிகள் என்கிறார் செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

1000 ரூபா சம்பள உயர்வு கோரி வேலை தவிர்ப்பு போராட்டம், நாடளாவிய ரீதியில் 05ஆம் திகதியன்று ஏற்பாடு - இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கங்களை விட அதிக முயற்சிகள் என்கிறார் செந்தில் தொண்டமான்

தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் மலையக மக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலை தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று நடைபெற்றது. 

இங்கு மேலும் அவர் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை தொடர்ச்சியாக சென்றுகொண்டிருப்பதால் இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அரசாங்கத்திற்கு அன்று அவர் முதலாவது கோரிக்கையாக இந்த ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினையை முன்வைத்தார். இதனை தீர்த்து வைக்கும் வகையிலேயே அரசாங்கத்திற்கு அதரவு வழங்கினார்.

அதற்கமைய இந்த அரசாங்கம் இந்த சம்பளப் பிரச்சினை குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நான் உட்பட பல முக்கியஸ்தர்களுடன் தோட்டக் கம்பனிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினர். 

அவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. காரணம் கம்பனிகள் தோட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் இருக்கின்றது என நினைக்கின்றனர். அவர்களுடன் இணைந்து இந்த சம்பள உயர்வை வழங்காமல் வந்துள்ளனர்.

இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கங்களை விட அதிக முயற்சிகள் செய்தன. அதனால்தான் இன்று இந்த சம்பளப் பிரச்சினையை சம்பள நிர்ணய சபை மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்தடவையாக இந்த சம்பளப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட முடியாத நிலையில், இந்தப் பிரச்சினையை சம்பள நிர்ணய சபை மூலமாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பள நிர்ணய சபையில் சட்டத்தரணி க.மாரிமுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதியாக இருக்கின்றார்.

இந்த நிலையில் 900 ரூபா அடிப்படையாகவும் 100 ரூபா வரவு செலவுத்திட்ட அலவன்ஸாக வழங்க அவர்கள் உத்தரவாதம் அளிக்கிறார்கள்.

ஏதிர்வரும் 6ஆம் திகதி கூடவுள்ள நிர்ணய சபை கூட்டத்தில் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆயிரம் ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான தீர்மானத்திற்கு வர முடியுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

கொழும்பு கோட்டை நிருபர்

No comments:

Post a Comment