ETI நிதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வருக்கும் மீண்டும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஜீவக எதிரிசிங்க, தீபா அஞ்சலி எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க ஆகிய குறித்த 4 சந்தேகநபர்களுமே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ETI நிதி நிறுவன மோசடி தொடர்பில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட நிலையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் (CID) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த நால்வருக்கும் கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் அவர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
இதன்போது, சந்தேகநபர்களை தலா ரூ. 50 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளிலும் ரூபா 10 இலட்சம் கொண்ட ரொக்கப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதவான், ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும், CIDயில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு எதிர்வரும் மே 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரூபா 13.7 பில்லியன் வைப்பீட்டை சட்டவிரோதமாக பெற்றதன் மூலம் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த வாரம் (05) கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் (06) விடுதலை செய்யப்பட்ட நிலையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் (CID) மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது பிணை தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) விசாரணை செய்த கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் இன்றையதினம் (15) பிணை தொடர்பான உத்தரவை வழங்குவதாக அறிவித்திருந்தார்.
சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்றையதினம் (15) மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment