அஸாத் சாலி தற்கொலைக் குண்டுதாரியாக மாறப்போகின்றாரா? - விமல் வீரவன்ச கேள்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 6, 2021

அஸாத் சாலி தற்கொலைக் குண்டுதாரியாக மாறப்போகின்றாரா? - விமல் வீரவன்ச கேள்வி

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காவிட்டால், விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்று அஸாத் சாலி தெரிவித்திருக்கிறார். அவ்வாறெனின் அவர் தற்கொலைக் குண்டுதாரியாக மாறப்போகின்றாரா? அஸாத் சாலி உள்ளடங்கலாக இவ்வாறு அடிப்படைவாத நோக்கில் செயற்படுகின்ற அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியிருக்கிறார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அஸாத் சாலி உள்ளடங்கலாக அடிப்படைவாத நோக்கில் செயற்படுகின்ற அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாரை வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் சட்டத்தில் தலையீடு செய்வதற்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரை மிரட்டுவதற்கும் அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை. அவற்றுக்கு அனுமதியளித்து, வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் அது ஆட்சியதிகாரத்தை வழங்கி மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்குப் புறம்பான செயற்பாடாகவே அமையும்.

எனவே அடிப்படைவாத நோக்கிலும் சட்டத்தை செயற்படுத்துவோரை மிரட்டும் விதமாகவும் செயற்படுவோருக்கு எதிராக சட்டதிட்டங்களை வலுப்படுத்துவதற்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பயன்படுத்துமாறு ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

அதேவேளை சடலங்களைத் தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது குறித்த இறுதித் தீர்மானம் என்னவென்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 'தற்போதும் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று தீர்மானிக்கப்படவில்லை.

தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களைத் தகனம் செய்ய வேண்டும் என்பதே சுகாதார அதிகாரிகளின் முடிவு. அந்த முடிவே தற்போதும் செயற்படுத்தப்படுகின்றது' என்றார்.

மேலும் குறிப்பிட்ட அவர், அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எமக்குத் திருப்தியளிப்பவையாக இல்லை. ஏனெனில் இவற்றில் மேலும் வலுவாகத் தலையீடு செய்யப்படும் என்றே நாட்டுமக்கள் நம்புகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment