ஐக்கிய அரபு அமீரகத்தில் நன்கொடை வசூலித்தால் அபராதத்துடன் சிறை - மத்திய தேசிய கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது புதிய சட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 6, 2021

ஐக்கிய அரபு அமீரகத்தில் நன்கொடை வசூலித்தால் அபராதத்துடன் சிறை - மத்திய தேசிய கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது புதிய சட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் அனுமதி இல்லாமல் நன்கொடை வசூலித்தால் 5 லட்சம் திர்ஹம் வரை அபராதம் விதிக்க வழி செய்யும் வகையிலான புதிய சட்டத்தை மத்திய தேசிய கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய தேசிய கவுன்சில் கூட்டம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. சபாநயகர் சகர் கோபாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அந்த புதிய சட்ட மசோதாவில், அமீரகத்தில் உள்ளவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உரிமம் இல்லாமல் நன்கொடை வசூலிப்பது அல்லது அளிப்பதை தடை செய்யும் வகையில் வரைவு செய்யப்பட்டு இருந்தது. இந்த சட்ட வரைவில் மொத்தம் 34 ஷரத்துகள் இடம்பெற்றுள்ளது.

இதன்படி இனி நாட்டில், உள்நாட்டு அரசுத்துறைகள் மூலமாக சட்டவிரோதமாக நன்கொடை வசூல் செய்வது தடை செய்யப்படும். 

குறிப்பாக அறக்கட்டளை, மனிதாபிமான செயல்பாடுகளுக்கான நன்கொடைகளை உரிமம் இல்லாமல் வசூல் செய்வது அல்லது வெளிநாடுகளுக்கு அளிப்பது, பிரசாரம் அல்லது விளம்பரம் செய்வது தடை செய்யப்படுகிறது. 

மேலும் தனிநபர் அல்லது கூட்டமாக சேர்ந்து நன்கொடைகளை வசூல் செய்வதும் தடை செய்யப்படுகிறது.

முறையான உரிமத்தை அரசுத்துறைகளில் பெற்ற பின்னரே நன்கொடைகளை வசூல் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் தனிப்பட்ட முறையில் வசூல் செய்தால் அது சட்டமீறலாக கருதப்படும்.

இந்த சட்ட விதி மீறலுக்கு குற்றத்தின் தன்மையை பொருத்து, 1 லட்சம் திர்ஹம் முதல் அதிகபட்சமாக 5 லட்சம் திர்ஹம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவரைவு மசோதாவை ஏற்கனவே மத்திய தேசிய கவுன்சிலின் சமூகம், தொழிலாளர், மனிதவள மேம்பாடு விவகாரங்கள் கமிட்டியின் சார்பில் மறுஆய்வு மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த புதிய சட்ட மசோதா, மத்திய தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் கூடுதலாக ஒன்லைனில் உரிமத்துடன் நன்கொடை வசூல் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தேசிய கவுன்சிலின் சமூகம், தொழிலாளர், மனித வள மேம்பாடு விவகாரங்கள் கமிட்டியின் உறுப்பினரும், மத்திய தேசிய கவுன்சிலின் உறுப்பினருமான மர்யம் மஜெத் பின் தானியா கூறுகையில், ‘‘உலக அளவில் வெளிநாடுகளுக்கு அளிக்கப்படும் நிதியை ஒழுங்குமுறைப்படுத்த இம்மசோதா வழிவகுக்கும்.

குறிப்பாக பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுவது, முறைகேடான பணப்பரிமாற்றம் ஆகியவற்றை தடை செய்யும் நோக்கத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

அமீரக மன்னரின் ஒப்புதலுக்கு பிறகு வர்த்தமானி வெளியிடப்பட்டு முறையான சட்டமாக அமுல்படுத்தப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment