கொவிட்-19 தடுப்பு மருந்து கொள்வனவு விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் - ஐக்கிய தேசியக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 6, 2021

கொவிட்-19 தடுப்பு மருந்து கொள்வனவு விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் - ஐக்கிய தேசியக் கட்சி

(நா.தனுஜா)

கொவிட்-19 தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்வதுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சாந்தினி வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,  ஐக்கிய நாடுகள் சபையின் கீழான கொவெக்ஸ் செயற்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான இறுதி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது. 

இந்த உடன்படிக்கையின் முதற்பாகத்தில் கடந்த டிசம்பர் மாதமே அரசாங்கம் கைச்சாத்திட்டுவிட்ட போதிலும், அது குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்குத் தவறிவிட்டது.

கொவெக்ஸ் செயற்திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையின் முதற்பாகத்தில் கைச்சாத்திட முன்னர், தடுப்பு மருந்தைக் களஞ்சியப்படுத்துவதற்கான வசதி மற்றும் அதனை யாருக்குப் பயன்படுத்துவது என்பது குறித்த விபரங்களை வழங்குவது அவசியமாகும். 

உடன்படிக்கையின் முதற்பாகத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள நிலையில், மேற்படி விபரங்களை மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவது அவசியமாகும் என்றார். 

கொவிட்-19 தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 பில்லியன் ரூபா கடன் பெறவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அரசாங்கம் தெரிவித்தது. அதுமாத்திரமன்றி இது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

எனினும் தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் இன்னமும் அறியவில்லை. ஆகவே இவ்வனைத்து விடயங்களிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்று நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment