(எம்.ஆர்.எம்.வஸீம்)
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்களை பல வாரங்கள் அதி குளிர்சாதனங்களில் வைத்திருந்த நிலையில் அவற்றில் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டு பார்க்கும்போது வைரஸ் தொற்று இருப்பதாகவே காண்பிக்கும். என்றாலும் அவை உயிருள்ள நிலையில் இருக்காது என பாராளுமன்ற உறுப்பினரும் வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களில் சடலங்கள் அதி குளிர்சாதனங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சில வாரங்கள் சென்று பீ.சிஆர். பரிசோதனை மேற்கொண்டாலும் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதனால் அடக்கம் செய்வது அச்சுறுத்தலான விடயம் எனவும் ஒரு சிலரால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அதிகுளிர்சாதனங்களில் பல வாரங்கள் இருக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்களில் இருந்து பெறப்படும் மாதிரிகளை பரிசோதித்து பாக்கும்போது, அதில் கொரோனா வைரஸ் இருக்கலாம். என்றாலும் அவை உயிருள்ளதாக இருக்காது. அதனால் மரணித்தவர்களின் சடலங்களில் இருந்து வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பில்லை.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நபரிடமிருந்து, ஆரோக்கியமான ஒருவருக்கு வைரஸ் பரவுவதாக இருந்தால், உயிருள்ள வைரஸ் குறிப்பிடத்தக்களவு பரிமாறிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் நோய்த் தொற்று ஏற்படுவது குறைவாகும்.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்பவரின் சடலத்தில் உயிருள்ள வைரஸ் பல மணி நேரங்கள் இருக்கலாம். என்றாலும் அந்த சடலங்களை அடக்கம் செய்த பின்னர், நீருடன் கலந்து வைரஸ் பரவுவதாக விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் சடலங்களில் இருக்கும் வைரஸ் தொடர்பாக தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றார்.
No comments:
Post a Comment