புதிய அரசியலமைப்பை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றுவோம் - கொவிட் தொற்றுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை : பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

புதிய அரசியலமைப்பை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றுவோம் - கொவிட் தொற்றுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை : பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

(எம்.மனோசித்ரா)

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஒருபோதும் காலம் தாழ்த்தப்படமாட்டாது. இந்த வருடத்தின் இறுதிக்குள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி அதனை பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பேராதனிய - கெட்டம்பே விகாரையின் விகாரஸ்தானிதிபதியுடனான சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பானது 43 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். அவ்வாறிருக்கையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குதல் என்பது மிகவும் கவனத்துடன் முன்னெடுக்க வேண்டிய விடயமாகும். 

எனவேதான் ஆரம்பத்திலேயே நாம் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தோம். அந்த நிபுணர்கள் குழுவில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் அங்கத்துவம் வகிக்கின்றனர். எதிர்வரும் ஓரிரு மாதங்களில் அவர்களது நிலைப்பாடுகளும் பரிந்துரைகளும் எமக்கு கிடைக்கப்பெறும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதற்கமைய இந்த வருடத்தின் இறுதிக்குள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி அதனை பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அதனை நாம் ஒருபோதும் காலம் தாழ்த்தப்போவதில்லை. இதனை எதிர்வரும் 2 அல்லது 3 வருடங்களுக்கு காலம் தாழ்த்தினால் அது பிரயோசமற்ற செயற்பாடாகும்.

கொவிட் தொற்று அச்சுறுத்தல் என்பது இலங்கையில் மாத்திரமல்ல. முழு உலகமும் முகங்கொடுத்துள்ள பாரிய சவாலாகும். எனவே இதற்கு நாம் அடிபணிவதா ? அடிபணிந்து அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்துவதா ? இதனை விட பாரிய சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து அவற்றை வெற்றி கொண்ட நாடு இலங்கையாகும்.

30 வருட காலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை எவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்றும் நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் யார் எண்ணியது ? எனவே கொவிட் தொற்றுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அச்சுறுத்தல் காணப்படுகிறது என்பதற்காக பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடி வைத்திருக்க முடியாது. எனவே எவ்வித செயற்பாடுகளையும் அரசாங்கம் தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் என்றார்.

No comments:

Post a Comment