அரசாங்கம் நிதியுதவி வழங்குமாறு கோரி தனியார் துறையினரிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது - ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

அரசாங்கம் நிதியுதவி வழங்குமாறு கோரி தனியார் துறையினரிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது - ரணில் விக்கிரமசிங்க

(எம்.மனோசித்ரா)

கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக எமது அயல் நாடான இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் மிகவும் பொறுப்புணர்வுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன. எனினும் எமது அரசாங்கம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள நிதியுதவி வழங்குமாறு கோரி தனியார் துறையினரிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தேசிய நிதியில் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எவ்வாறான அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கு முழுமையான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும், அரசாங்கமும் பாராளுமன்றமும் துரிதமாக செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் சனிக்கிழமை இளைஞர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் தடுப்பூசிக்கான கேள்வி அதிகம் என்பதால் ஆரம்ப கட்டமாக நூற்றுக்கு 3 வீதமே வழங்கப்படவுள்ளது. அதற்கமைய சுகாதார தரப்பினருக்கு மாத்திரமே வழங்கப்படும். இலங்கை அதனைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் எதனையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. ஏனைய நாடுகளில் இதற்காக செலவீனத்தை வரவு செலவு திட்டத்தினூடாக பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளன.

கொவிட் தொடர்பான தேசிய குழுவொன்று அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன் பிரதானியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் போன்ற உயர்மட்ட சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு குழுவும் இதுவரையில் அமைக்கப்படவில்லை. 

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய ஒரு தடுப்பூசிக்காக 1.60 டொலர் வழங்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்கான முன்னேற்பாடுகளை உள்ளடக்கி இந்தியா புத்தகமொன்றை தயாரித்துள்ளது. அதில் தடுப்பூசி நிலையமொன்று எவ்வாறு இயங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் ஒரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

இது தொடர்பில் உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள செலவிற்கான நிதி எந்த வகையில் ஒதுக்கப்படவுள்ளது என்பதையும் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகர்களிடம் சென்று தடுப்பூசியை பெறுவதற்கு 10 மில்லியன் டொலர் நன்கொடை வழங்குமாறு அரசாங்கம் கோரவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுதல் எமது பிரதான கடமையாகும். இது வாழ்வதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும். சுதந்திரமான சுகாதாரத் துறையைக் கொண்டுள்ள அரசாங்கத்திற்கு எமது நிதியில் இதனை பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அந்த நிதியை வரவு செலவு திட்டத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும். பாரியளவான நிதி அல்ல. மாறாக அதற்கு முதற்கட்டமாக 20000 மில்லியன் டொலர் ஒதுக்குவது போதுமானது. இவை எதனையும் செய்யாது நிதி வழங்குமாறு தனியார்துறையிடம் கையேந்திக் கொண்டிருக்கின்றோம்.

எதிர்கால சந்ததியினருக்காக பணத்தை செலவிடுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை. நிதியை சேகரிப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் அந்த நிதியை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்காகவும், மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பயன்படுத்தலாம். 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பித்தது. ஆனால் இதுவரையில் செயற்கை சுவாச கருவிகள் மேலதிகமாகக் கொள்வனவு செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் சீனாவிலிருந்து நன்கொடையாக அவை கிடைத்தன. ஆனால் தற்போது அம்புலன்ஸ் வண்டிகளிலுள்ளவை கூட அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அந்த நிதியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திற்கு பிரதான பொறுப்பு காணப்படுகிறது. நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பிற்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்தல் என்பவை அந்த பொறுப்பாகும். எனினும் இந்த செயற்பாடு தோல்வியடைந்துள்ளது. எனவே துரிதமாக செயற்படுமாறு அரசாங்த்தையும் பாராளுமன்றத்தையும் வலியுறுத்துகின்றோம். இதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். 

இங்கு ஆட்சி மாற்றம் என்பது அநாவசியமானது. தற்போது எமக்கு காணப்படுகின்ற பிரதான சவாலானது வாழ்வதற்கான போராட்டமாகும். சுகாதார பாதுகாப்பும் அத்தியாவசியமானது. மாறாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தல் உள்ளிட்டவை இங்கு தேவையற்றவை. பாராளுமன்றத்தில் இவை தொடர்பில் வெளிப்படுத்துங்கள். உண்மைகளை தெளிவுபடுத்துங்கள். இதற்கான செலவை அதிகரிக்க வேண்டுமெனில் எமக்கு கூறுங்கள். அதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுகாதார தரப்பினர் உள்ளிட்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று பாராளுமன்ற தெரிவுக்குழுவை கூட்டி ஒவ்வொரு நாளும் என்னென்ன செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராயுமாறு வலியுறுத்துகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை காலம் தாழ்த்தினால் எமக்கு தடுப்பூசிகள் கிடைப்பதும் தாமதமாகும்.

கொவிட் பரவல் இதனுடன் நிறைவடைந்துவிடும் என்று எண்ண வேண்டாம். மீண்டுமொருமுறை பரவக்கூடும். அடுத்த தமிழ் - சிங்கள புத்தாண்டின் போதும் இந்த நிலைமை மாற்றமடையாது. ஒரு வருடம் நிறைவடைந்துள்ள போதிலும் அரசாங்கம் எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.

தற்போது பாரிய நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்துள்ளதால் எவ்வாறான அரசியல் கொள்கையைக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு அப்பால் அனைவருக்கும் உதவ நாம் தயாராக இருக்கின்றோம். அதற்கும் இனங்கவில்லை என்றால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை மக்களை உயிரிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையாக கருதக்கூடும். 

எனவே ஒவ்வொருவரிடமும் சென்று கையேந்திக் கொண்டிருக்காமல் பேதமின்றி அனைவரிடமும் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment