உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை நெருக்கடிக்குள் உள்ளாக்கியுள்ளது எனத் தெரிவித்து 04.01.2021 கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் நியமித்த நியமன இயங்குநர் சபையினை இரத்துச் செய்ய வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அவர்களின் குடும்ப நிலைமைகளை கருதி தற்போதுள்ள இயக்குநர் சபையை மீளவும் இயங்க விடுதல், சங்கத்தின் கிளைக்குழு தேர்தலை நடத்தி புதிய இயக்குநர் சபையினை உருவாக்குதல் போன்ற மூன்று கோரிக்கைகளை வைத்து கடந்த 12.01.2021 தொடக்கம் உண்ணாவிரதம் போராட்டத்தில் இரண்டு தொழிலாளிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் இன்றையதினம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டதன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் இவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கிட்டத்தட்ட 500 தொழிலாளர்களுக்கு சார்பாக அவர்களது உற்பத்தியை நிறுத்தி கடைகளை பூட்டி உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்கின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பாக 3 நாட்களுக்கு முன் வடக்கு மாகாண ஆளுநருடன் நான் பேசி இருந்தேன். இன்று காலையும் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுனருடன் பேசிய போது தான் உடனடியாக தனது ஆளணியுள் உள்ளவர்களை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தார் அன்றைய தினமும் இதை கூறியிருந்தார். ஆனால் அவருடைய பிரதிநிதியாக வந்து இவர்களை சந்தித்ததாக நான் அவர்களிடமிருந்து அறியவில்லை.
இது தொடர்பாக வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் வாகிசனுக்கு எழுத்து மூலமாக இதுவரை 3 கடிதங்கள அனுப்பியுள்ளேன் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு 4 கடிதங்கள் அனுப்பி உள்ளேன் அத்துடன் மாவட்ட கூட்டுறவு ஆணையாளருக்கும் கடிதங்கள் அனுப்பி உள்ளேன்.
இவர்கள் அனைவரும் மக்களின் உயிர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் உண்ணாவிரதம் இருப்பவர்களில் ஒருவர் பேசுகின்ற சக்தியை இழந்து இருக்கின்றார். அந்த வகையிலே உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கைகள் நியாயமானது ஜனநாயகமானது இதனை நிராகரித்தால் அல்லது இவர்களுக்கு ஏதாவது உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரும் அந்த கூட்டுறவு துறைக்கு பொறுப்பாக இருப்பவர்களுமே பதில் கூற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment