(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. கூட்டணியாக செயற்பட்டாலும் அவதானத்துடன் இருப்போம். மீண்டும் ஒக்டோபர் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. பொதுஜன பெரமுன எந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெறும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் சுதந்திர கட்சி பங்காளி கட்சியாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணியை உருவாக்கியது. கூட்டணியையும், அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினரும் சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் சுதந்திர கட்சியின் மீது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை நம்பிக்கையானவர்களே பலவீனப்படுத்தினார்கள். 2015 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சியினால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த அரசாங்கத்தின் பலவீனத்தன்மையினால் நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தற்போதைய அரசாங்கத்தில் ஒருபோதும் ஏற்படாது. சுதந்திர கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அவதானித்து வருகிறோம். கூட்டணியாக தொடர்ந்து இணக்கமாக செயற்படுவதே எமது இலக்காகும்.
சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எவருக்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஊடாக தீர்மானித்து விட்டார்கள். ஆகவே பொதுஜன பெரமுன எந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெறும் என்றார்.
No comments:
Post a Comment