(நா.தனுஜா)
தங்க முட்டை போடும் வாத்தை மாற்றானொருவருக்கு கொடுத்து விடும் அளவிற்கு நாம் பலவீனமானவர்களல்ல. ஆகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்வாகத்தை இந்தியாவிற்கோ அல்லது மற்றுமொரு தரப்பிற்கு விட்டுக் கொடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போவதுமில்லை என தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, 51 வீதமான பங்குகளுடன் நிர்வாக மற்றும் தீர்மானமெடுக்கும் அதிகாரங்கள் இலங்கை வசமே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கோ அல்லது வேறு தரப்பினருக்கோ விற்பனை செய்வதாகவோ அல்லது அவர்களுடன் ஒன்றிணைந்து நிர்வகிப்பதாவோ இறுதித்தீர்மானம் எடுக்கப்பட்ட அமைச்சரவைப்பத்திரம் எவையும் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அத்தகைய அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே, என்ன நடக்கப்போகின்றது என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியும்.
இதுபற்றி கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது துறைமுக அமைச்சரிடம் வினவினேன். அதற்கு, அரச - தனியார் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதாயின் துறைமுகத்தின் 51 சதவீதம் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமாக இருக்கும் அதேவேளை அதில் பெரும்பான்மை நிர்வாக உரிமையும் உள்ளடங்கும் வகையிலேயே வழங்கப்படும் என்று பதிலளித்தார்.
ஆகவே இது விடயத்தில் எத்தகைய இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படுகின்றது என்று அவதானித்து வருகின்றோம். அதன் பின்னரே எமது நிலைப்பாட்டை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment