(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்வதற்கு எதிராக கருத்துரைக்கும் அரசியல்வாதிகள் தங்களின் எதிர்கால அரசியல் இருப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினருக்கு அரசாங்கம் அநீதி இழைக்கவில்லை. கூட்டணியில் உள்ள கருத்து முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (06.01.2021) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் அடக்கம் செய்யலாம் என பொதுஜன பெரமுனவில் கூட்டணி அமைத்துள்ள ஒரு சிலர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தங்களின் எதிர்கால அரசியல் இருப்பினை கருத்திற் கொண்டே இவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள். கொவிட் விவகாரத்தில் அரசாங்கம் சுகாதார தரப்பினரது தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை மாத்திரமே செயற்படுத்தும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அநீதி இழைக்கவில்லை. கூட்டணியாக செயற்படும்போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு. அனைத்து முரண்பாடுகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ளலாம். அதனை விடுத்து முறையற்ற வகையில் செயற்படுவது பொருத்தமற்றதாகும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கம் இலங்கையில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என எதிர்த்தரப்பினர் எண்ணி பொருத்தமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இலங்கையில் மாத்திரம் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. எம்மை காட்டிலும் பொருளாதாரத்தில் பலமிக்க நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சிடைந்துள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரு பிரதான துறைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொதுமக்களை பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் நாட்டுக்கு அழைத்து வருகையில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டன. அவை இனிவரும் காலங்களில் திருத்திக் கொள்ளப்படும். சுற்றுவலாத்துறை சேவையினை கட்டியெழுப்ப எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய சுற்றுலாத்துறை சேவை முன்னெடுக்கப்படும்.
அடுத்த மாதமளவில் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு எதிர் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.
No comments:
Post a Comment