மக்கள் தனிமைப்படுத்தல், நோய்த் தடுப்பு சட்ட விதிகளை கடைப்பிடிக்காவிடின் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்கிறார் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

மக்கள் தனிமைப்படுத்தல், நோய்த் தடுப்பு சட்ட விதிகளை கடைப்பிடிக்காவிடின் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்கிறார் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதன் காரணமாக அங்கு புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அந்த பகுதிகளை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய நிலமை ஏற்படும் என்றும், அதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, காத்தான்குடி பொலிஸ் பிரிவும், சில கிராம சேவகர் பிரிவுகளும், வீதிகள் மற்றும் தொடர் மாடி குடியிருப்புகள் மாத்திரமே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 3,469 பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்கும், 190 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் 178 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுள் 140 பேர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள், எஞ்சிய 38 பேரும் வெளிபிரதேசங்களிலிருந்து அங்கு வந்தவர்களாவர்.

இந்நிலையில் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அங்கு புதிய தொற்றாளர்கள் உருவாகுவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அந்த பகுதிகளை நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய நிலைமையே ஏற்படும். அதனால், அப்பகுதி மக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

இதேவேளை, நீண்ட காலமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்ட விதிகளுக்கமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும். இதன்போது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

அதற்கமைய அனைவரும் ஒன்றுகூடி உணவு உட்கொள்ளுதல், கலந்துரையாடுதல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒன்றுக்கூடி செயற்படுவதால் மீண்டும் அந்த பகுதிகளில் வைரஸ் பரவலடைவதற்கான வாய்புள்ளது. அதனால் அத்தகைய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாதவர்களை அடையாளம் காணுவதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய மேல் மாகாணத்தை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் முகக் கவசம் அணியாமை தொடர்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,605 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment