(செ.தேன்மொழி)
பொலிஸ்மா அதிபரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு, பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு விளைவிக்கும் நபர்கள் தொடர்பில் உடனே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு யாருக்குமே பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு தலையீடு செலுத்த முடியாது. இந்நிலையில் எந்த அதிகாரியாவது இத்தகைய நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரினால், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் கட்டளை அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள், பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள், மாவட்டங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட அரச நிறைவேற்று அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் பரிசோதகர்களுக்காக அனுப்பப்பட்ட கடிதத்திலே மேற்கண்டவாறு அவர் குறிப்பட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, பொலிஸ்மா அதிபரின் உறவினர்கள், நண்பர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் பொலிஸ் நிலையங்களுக்கு தொடர்புகொண்டு, அங்கு இடம்பெறும் விசாரணை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசேட விசாரணை பிரிவுகளில் இடம்பெறும் விசாரணை நடவடிக்கைகளுக்கு பொலிஸ்மா அதிபரின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்று கூறிக்கொண்டு எவருக்கும் தலையீடு செய்ய முடியாது.
அதனால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு யாராவது, அவ்வாறு தொடர்புகொண்டு அவர்களின் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் அது தொடர்பில், 017-8591859 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். கீர்த்திப்பால, 071-8592290 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்லியூ.ஜே.என். சேனாரத்ன மற்றும் 071-8592022 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பிராதான பொலிஸ் பரிசோதகர் கே.என். நாகந்தல ஆகியோரை தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும்.
இதன்போது யாராவது ஒருவர் தான் பொலிஸ்மா அதிபரின் உறவினர் என்று கூறிக்கொண்டு, ஏதாவது ஒரு சாராருக்கு சார்பாக செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்தல், அதற்கிணங்க செயற்பட வேண்டாம். இந்நிலையில் அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் பக்கச்சார்பின்றி நியாயமான முறையில் மேற்கொள்ளுங்கள்.
அவ்வாறு எந்த அதிகாரியாவது ஒரு பிரிவினருக்கு ஆதரவாக செயற்பட்டு, அதனால் மற்றைய தரப்பினருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது தொடர்பான பொறுப்பை அந்த அதிகாரிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதேவேளை இந்த ஆலோசனைகளுக்கு புறம்பாக யாராவது ஒரு அதிகாரி செயற்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment