தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் வெற்றி பெற்றவுடன் மறுப்பு, ஒரு வாரத்தில் தீர்வின்றேல் தொடர் பணி புறக்கணிப்பு : தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 17, 2021

தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் வெற்றி பெற்றவுடன் மறுப்பு, ஒரு வாரத்தில் தீர்வின்றேல் தொடர் பணி புறக்கணிப்பு : தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

தனியார் பேருந்து உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு வார காலத்துக்குள் தீர்வு வழங்குவதாக போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதியினை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனினும் 6 கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்துக்குள் தீர்வு வழங்காவிடின் தொடர்பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கடந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம் தனியார் பேருந்து போக்கு வரத்து சேவை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட நிவாரண நிதி தென் மாகாண சபை ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அந்த நிவாரணமும் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அரசாங்கத்திற்கும் தனியார் பேருந்து சங்கத்தினருக்கும் முரண்பாடற்ற வகையில் பல திட்டங்களை முன்வைத்தோம். ஆனால் அவை செயற்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதலாம் இரண்டாம் அலையின் காரணமாக தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்ட சுமார் 600 பேர் சேவையினை கைவிட்டுள்ளார்கள். இவர்கள் வாழ்வாதார மட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மறக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டித்தும் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளவும் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தோம்.

பணிப்புறக்கணிப்பு போராட்ட தீர்மானத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின் போது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் 6 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

தனியார் மற்றும் அரச பேருந்து சேவையினை ஒரு நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வரல், லொக்சீட் சேவைக்கான நவம்பர், டிசெம்பர் மாதத்துக்கான கட்டணம் அறவிடல் இரத்து செய்தல், லீசிங் வசதிகளை வழங்கல், நிவாரண கடன் வழங்கல், போக்கு வரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்கல் ஆகியவை சங்கத்தின் பிரதான கோரிக்கையாக காணப்படுகின்றன.

இந்த கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்தில் தீர்வு வழங்குவதாக போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் வாக்குறுதி வழங்கியுள்ளார். இதனால் இன்று முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் தீர்வு கிடைக்கப் பெறாவிடின், பேச்சுவார்த்தையில்லாத தொடர்பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

No comments:

Post a Comment