(ஆர்.யசி)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 51 வீத உரிமம் இலங்கைக்கும், 49 வீத உரிமம் இந்திய அதானி நிறுவனத்திற்கும் நிருவாக ரீதியில் வழங்கும் உடன்படிக்கையை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதனை தடுக்க துறைமுக தொழிற்சங்கங்கள், அரச பிரதிநிதிகளுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த பேச்சுவார்த்தையில், 51-49 வீதம் என்ற உரிமத்தின் அடிப்படையிலான உடன்படிக்கைக்குள்ளே பேச்சுவார்த்தை நடத்துவதென்றால் அரசாங்கம் தயார் எனவும் இலங்கைக்கு 100 வீத உரிமத்தை வழங்கவே முடியாது எனவும் அமைச்சரவை உபகுழு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இந்திய அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ளவுள்ள நிலையில், அது குறித்து ஆராய ஏழு பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
எனினும் அரசாங்கத்தின் இந்த உடன்படிக்கையை எதிர்த்து துறைமுகத்தில் பணிபுரியும் 23 தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.
இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முழுமையான உரிமத்தையும் துறைமுக அதிகார சபையே கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பிரேரணையை, அமைச்சரவை உப குழுவிடம் கடந்த சனிக்கிழமை தொழிற்சங்க பிரதிநிதிகள் கையளித்த போதிலும் அமைச்சரவை உப குழு தொழிற்சங்கங்களின் பிரேரணையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இலங்கை துறைமுக அதிகார சபையிடம் நூறு வீத உரிமத்தை வைத்துக் கொண்டு கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அவ்வாறு இலங்கையே கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதென்றால் கூட, அதற்கு இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும். அதற்குள் இலங்கைக்கு துறைமுகத்தினால் கிடைக்கும் வருமானமும் இல்லாது போகும். சர்வதேச கப்பல்களின் வருகையும் நின்றுபோகும்.
எனவே இந்திய நிறுவனத்துடன் செய்துகொள்ளும் இந்த உடன்படிக்கையே சிறந்த ஒன்றாக அரசாங்கம் கருதுவதாகவும், இலங்கைக்கு 51 வீத உரிமமும், இந்தியாவிற்கு 49 வீத உரிமமும் என்ற ரீதியில் இணக்கம் கண்டுள்ளதால் இந்த உடன்படிக்கையின் கீழ் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதென்றால் எதிர்வரும் 22 ஆம் திகதி இறுதியாக ஒரு பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ள தாம் தயார் எனவும் அமைச்சரவை உப குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் உடன்படிக்கைக்கு இணக்கம் இல்லாது தொழிற்சங்கங்கள் கூறுவதை போல் 100 வீத உரிமத்துடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பேச்சுவார்த்தைக்கு வருவதென்றால் அதற்கு தாம் தயாரில்லை எனவும், தொழிற்சங்கங்களின் இந்த கோரிக்கை நியாயமானதும், நடைமுறை சாதியமும் இல்லாத ஒன்றெனவும் அமைச்சரவை உப குழு அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment