டொனால்ட் டிரம்ப்பின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. இதற்கான பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என அமெரிக்க ராணுவ தலைமையிடம் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.
குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6ம் திகதி நடைபெற்றது.
அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதியாக வரும் ஜோ பைடன் வரும் 20ம் திகதி பதவியேற்க உள்ளார். பைடன் பதவியேற்பு விழாவையொட்டி பாராளுமன்ற கட்டிடம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் பதவிக் காலம் வரும் 20ம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. வழக்கமாக அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக் காலம் முடிவடையும் போது அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியின் அரசில் இடம்பெற்றிருந்த பலரும் வெளியேறும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை கொடுப்பர்.
அந்த வகையில், டொனால்ட் டிரம்ப்பின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடைவதால் பிரியாவிடை நிகழ்ச்சிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ராணுவத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், டிரம்பின் கோரிக்கையை பென்டகன் நிராகரித்துள்ளது.
ஜோ பைடன் பதவியேற்பு விழா பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது. அந்த விழாவுக்கான பாதுகாப்புக்காக தேசிய பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆகையால், ஜனாதிபதி டிரம்ப்பின் பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என பென்கடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment