அரசியலில் ஈடுபடும் எந்தவிதமான யோசனைகளும், எண்ணமும் எனக்கு இல்லை. நான் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக வெளியாகிய செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என ஓய்வு பெற்ற அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆளுந்தரப்பு மற்றும் எதிர்தரப்பு கட்சிகள் பரவலாக பேசி வருகின்ற நிலையில் அத்தேர்தலுக்கான தமது தயார்ப்படுத்தல்களிலும் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
வெளித் தோற்றமளவில் இவ் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாத நிலையிலும் ஒவ்வொரு கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலில் களமிறக்கப்போகும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன.
இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது வேட்பாளர்களாக யார், யாரை களமிறக்குவது என்பது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தின் அரச அதிபராக இருந்து ஓய்வு பெற்ற நாகலிங்கம் வேதநாயகன் போட்டியிடப்போவதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக அவருடன் பேசப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அச்செய்தி தொடர்பாக வேதநாயகத்துடன் தொடர்புகொண்டு வினவிய போது, அச்செய்தியில் எந்த விதமான உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தன்னுடன் எதுவும் பேசப்படவில்லை எனவும், யாரும் தன்னை தேர்தலில் போட்டியிட அழைக்கவில்லை எனவும், தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment