(ஆர்.ராம்)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முழுமையான உரித்தையும் இலங்கையே கொண்டிருக்க வேண்டும் என்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கீழ் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கேற்புடன் அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வரும் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக அதற்கான யோசனைகள் அடங்கிய திட்டத்தினை கையளிக்குமாறு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், அமைச்சின் அதிகாரிகள், துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தவர்கள் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் செயலாளர் யு.டி.சி.ஜெயலால் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரட்நாயக்க ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடலே நேற்று நடைபெற்றிருந்தது.
இந்தக் கலந்துரையாடலின்போது தொழிற்சங்கத்தரப்பில், ஏற்கனவே ஜனாதிபதி முன்னிலையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் ஒரு சதவீத பங்கையும் வெளிநாடுகளுக்கு வழங்கக்கூடாது. அதனுடைய பூரணமான முகாமை துறைமுக அதிகார சபையின் கீழ் இருக்க வேண்டும். அத்துடன் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பில் அதன் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்றை நியமித்துள்ள நிலையில், அந்தக் குழுவிடத்தில் தொழிற்சங்கங்களின் யோசனைகளை முன்னெடுப்பதற்கான யோசனை திட்ட வரைபினை தயாரித்து கையளிக்குமாறு கோரியதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன் அந்த யோசனைத் திட்டத்தினை தயாரித்து வழங்குவதற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் தயா ரட்நாயக்க மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment