இஸ்ரேலில் இரண்டு ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

இஸ்ரேலில் இரண்டு ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது

இஸ்ரேலின் ஆளும் கூட்டணியின் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இணக்கம் ஒன்று எட்டப்படாத நிலையில் அங்கு இரண்டு ஆண்டுகளுக்கு நான்காவது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதன்படி வரும் மார்ச் மாதம் வாக்காளர்கள் மீண்டும் தமது வாக்கை அளிக்க உள்ளனர். இது கடந்த 12 மாதங்களில் மற்றொரு சுற்று வாக்களிப்பாக அமையவுள்ளது.

முந்தைய இரு தேர்தல்களிலும் உறுதியான முடிவு கிடைக்காத நிலையில், எதிர்பாராத தேசிய ஐக்கிய அரசு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் ஊழல் குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்திருக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆறாவது தவணைக்காக பதவிக்கு வர எதிர்பார்த்துள்ளார்.

தம்மீதான குற்றவியல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் அவர், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறி வருகிறார்.

2020 அரச வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பாராளுமன்றம் தானாகக் கலைந்தது.

இந்தக் காலவதிக் காலத்தை நீடித்து வாக்கெடுப்பை நடத்த மேலதிக காலம் வழங்கப்பட்டபோதும், அந்த 11 மணி நேர முயற்சி தோல்வி அடைந்தது.

இந்த பிரச்சினைக்கு நெதன்யாகு தலைமையிலான தீவிர வலதுசாரி லிகுட் கட்சி மற்றும் அவரது அரசியல் போட்டியாளரான பென்னி காட்ஸ் தலைமையிலான மைய நீலம் மற்றும் வெள்ளை கட்சி பரஸ்பரம் குற்றம்சாட்டின.

‘எனக்கு தேர்தல் தேவையில்லை’ என்று நெதன்யாகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘லிகுட் (கட்சிக்கு) இந்தத் தேர்தல் தேவையில்லை. நாம் தேர்தலுக்கு எதிராக மீண்டும் மீண்டும் வாக்களித்தோம். துரதிருஷ்டவசமாக பென்னி காட்ஸ் எம்முடனான உடன்படிக்கையை நிராகரித்தார்’ என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் மார்ச் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தமது லிகுட் கட்சி பெரு வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். எனினும் பிரதமர் வார்த்தைகளை விட பொய்யையே அதிகம் கூறுகிறார் என்று காட்ஸ் குற்றம்சாட்டினார். தமது ஊழல் வழக்கை தவிர்ப்பதற்கு தேர்தலை நடத்த நெதன்யாகு திட்டமிடுகிறார் என்றும் அவர் கூறினார்.

ஒரு பலவீனமான கூட்டணி ஒன்றின் மூலம் கடந்த ஏப்ரல் தொடக்கம் இந்த இருவரும் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டனர். இரு வருக்கும் இடையிலான உடன்படிக்கையின்படி பிரதமர் பதவி பகிர்ந்துகொள்ளப்பட்டதோடு முதல் சுற்றில் 2021 நவம்பர் வரை நெதன்யாகு பிரதமராக பதவி வகிப்பதாக இருந்தது. இந்நிலையில் பிரதமர் பதவி கைமாறுவதை தவிர்க்கும் வகையில் நெதன்யாகு கூட்டணி அரசை கலைப்பதில் வெற்றி பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இஸ்ரேல் அரசியலில் நெதன்யாகுவின் செல்வாக்கு அதிகமாக இருந்தபோதும் அவரது கட்சியின் முன்னாள் உறுப்பினர் கிடியோன் சார் விலகிச் சென்று தனியாக கட்சி ஆரம்பித்திருப்பது எதிர்வரும் தேர்தலில் அவரும் கடும் சவாலாக மாறி இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment