கொழும்பில் திடீரென கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

கொழும்பில் திடீரென கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீரென தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கான காரணம் என்ன என்பதை தொற்று நோயியல் பிரிவு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் அங்குள்ள மக்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதி அசமந்தமாக செயற்படக்கூடும். இது பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பரவல் நிலைமையை புறந்தள்ளி எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது. இங்கிலாந்தில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்கள் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் இலங்கையிலும் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் இந்த வைரஸ் பரவியுள்ளதா இல்லையா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இதன் மூலமும் நிச்சயம் அபாயம் காணப்படுகிறது. 

இந்த அபாயத்திலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான சிறந்த வழிமுறை சமூகத்திலுள்ள தொற்றாளர்களை துரிதமாக இனங்காண்பதாகும். இதற்கு பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவினை அதிகரிக்க வேண்டும்.

இதற்கு அடுத்த படியாக முன்னெடுக்க வேண்டிய நடமைமுறை நகரங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதாகும். இது தொடர்பில் உலகலாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை அவதானித்து உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். 

அடுத்தாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை எந்த பகுதியில் அபாயம் காணப்படுகிறது என்பது மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

செவ்வாயன்று கொழும்பில் 101 தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை தொற்று நோயியல் பிரிவு தெளிவுபடுத்த வேண்டும்.

அதிக அபாயமுடைய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகரசபையில் இவ்வாறு திடீர் மாற்றம் ஏற்படக் காரணம் எள்ள? இதனை மக்களுக்கு தெளிவுபடுத்தாவிட்டால் அவர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணி அசமந்த போக்குடன் செயற்பட ஆரம்பித்துவிடுவார்கள். எனவே தான் உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

No comments:

Post a Comment