கொத்தமல்லி எனத் தெரிவித்து இறக்குமதியான 28 தாவரக் கழிவு கொள்கலன்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

கொத்தமல்லி எனத் தெரிவித்து இறக்குமதியான 28 தாவரக் கழிவு கொள்கலன்கள்

கொத்தமல்லி என தெரிவித்து, உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய தாவரக் கழிவுகள் கொண்ட 28 கொள்கலன்களை கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புறக்கோட்டை உணவு வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த 8 பேரினால், முழு கொத்தமல்லி விதை என, சுங்கத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட குறித்த கொள்கலன்கள் இன்று (24) ஊடகங்கள் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.

குறித்த இறக்குமதியின் பெறுமதி சுமார் ரூ. 75 மில்லியன் எனவும், இக்கொள்கலன்கள் அனைத்தும் உக்ரைனிலுள்ள அக்ரோனிகா ட்ரேட் எல்எல்சி (Agronika Trade LLC) எனும் நிறுவதனத்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதன் 8 கொள்கலன்கள் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளதோடு, ஏனைய 20 கொள்கலன்கள் கடந்த திங்கட்கிழமை (21) இலங்கையை வந்தடைந்துள்ளன.

கப்பலின் சரக்கு தொடர்பான உறுதிமொழி மற்றும் ஏனைய கப்பல் ஆவணங்களிலும் அது கொத்தமல்லி விதைகள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உக்ரைனின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனத்தினால், சர்வதேச ஏற்றுமதியின் போது வழங்கப்படும், விவசாய பொருட்களின் தரத்தை சான்றளிக்கும் சான்றிதழுடன் இச்சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த 28 கொள்கலன்களில் 24 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திலும் ஏனைய 4 கொள்கலன்களும் சுங்கத் திணைக்களத்தின் கொள்கலன் சோதனை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனை பரிசோதனை செய்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை, அவற்றை உரிய நாட்டிற்கு மீள ஏற்றுமதி செய்ய பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் 1999ஆம் ஆண்டு 35ஆம் இலக்க தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தாவரங்கள் அல்லது தாவரங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மற்றும் இலங்கை அங்கத்துவம் வகிக்கும், கழிவுகளை இடமாற்றும் சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய எந்தவொரு கழிவுகளையும் இறக்குமதி செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், குறித்த இறக்குமதிக்கு பொறுப்பான முகவரால், இறக்குமதியாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனரா என சந்தேகிப்பதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, சுங்கத் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆனந்த ஈஸ்வரன், சுங்க சமூக பாதுகாப்பு பணிப்பாளர் எஸ்.பி.ஐ. பாலசூரிய ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.வி. ரவிப்பிரியவின் வழிகாட்டலின் கீழ், இலங்கை சுங்கத் திணைக்கள நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment