மஹர சிறை களேபரம் - விசாரணை குழுவிலிருந்து விலகினார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

மஹர சிறை களேபரம் - விசாரணை குழுவிலிருந்து விலகினார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(எம்.எப்.எம்.பஸீர்) 

மஹர சிறை களேபரம் தொடர்பில் விசாரிக்க, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி நியமித்த ஐவர் கொண்ட விஷேட குழுவிலிருந்து, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை நீதி அமைச்சர் அலி சப்றிக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

மஹர களேபரம் ஏற்பட்டது முதல், அது தொடர்பில் பல்வேறு விடயங்களை ஊடகங்களுக்கு அறிவித்தவன் என்ற வகையிலும், தொடர்ந்தும் அது குறித்து செயல்பட வேண்டியவன் என்ற ரீதியிலும், அவ்விசாரணை குழுவில் அங்கம் வகிப்பது தார்மீக செயற்பாடாக அமையாது என சுட்டிக்காட்டியே அக்குழுவிலிருந்து விலகுவதாக அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.

மஹர சம்பவத்தை அடுத்து நேற்று திங்கட்கிழமை நீதியமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் முப்படையின் அதிகாரிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியால் ஐந்து பேரடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன உள்ளடங்கலாக நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹன சப்புகஸ்வத்த, ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் அவ்விசாரணை குழு உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தற்போது பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண விலகியுள்ள நிலையில், பெரும்பாலும் பொலிஸ் திணைக்களத்திலிருந்து பிரிதொருவர் நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment