(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
பெருந்தோட்ட வைத்தியசாலைகளை தேசிய சுகாதார கட்டமைப்பில் இணைப்பதற்கான முன்மொழிவை கடந்த அரசாங்க காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். சுகாதார அமைச்சர் இது குறித்து கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முழு நாடும், மக்களும் எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினையாக கொவிட் பரவல் உள்ளது. இதனை அரசியல் மயப்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டாலும் இந்தப் பிரச்சினை எவ்வளவுதூரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதென அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் கலாசார பண்பாட்டுக்கமைய கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பர்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். இதனை அரசியல் பிரச்சினையாக்கி இழுபறி நிலைக்கு தள்ள வேண்டாம்.
மேலும் பெருந்தோட்டத்துறையின் சுகாதார நடவடிக்கைகள் மிகவும் கீழ் மட்டத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இது சுகாதார அமைச்சருக்கு நன்றாகத் தெரியும். பெருந்தோட்டங்களில் காணப்படும் தோட்ட வைத்தியசாலைகளை தோட்ட வைத்திய உதவியாளர்கள்தான் நடத்துகின்றனர்.
பெருந்தோட்டத் துறையின் சுகாதார நிலை குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தின் போது சுகாதாரத் துறைக்கு குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் மூலம் தீர்வு காணும் முயற்சிகளை எடுத்திருந்தோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவின் முன்னெடுப்பில் சுகாதார அமைச்சில் உள்ள அதிகாரிகள் உட்பட துறைசார்ந்தவர்களை அழைத்து ஏற்படுத்த வேண்டிய தீர்வை இனங்கண்டோம். குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் தோட்டங்களில் 450 வைத்திய அலகுகள் இனங்காணப்பட்டன. அதில் 50 அலகுகளை அரச அமைப்பாக நடத்த ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மிகுதியையும் அரசாங்கம் உள்வாங்கி எவ்வாறு நடத்த வேண்டுமென்பது அறிக்கையில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் சுகாதார அமைச்சர் இது குறித்து கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment