யாழ்ப்பாணம், மருதனார் மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பி.சி.ஆர் முடிவு அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தினால் இன்று (15.12.2020) அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுவிலையைச் சேர்ந்த 2 பேரும், தெல்லிப்பழை, சண்டிலிப்பாயைச் சேர்ந்த தலா ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும் மருதனார் மடம் பொதுச் சந்தை வியாபாரிகள். இதன்மூலம் மருதனார் மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை வெளியாகியுள்ளது. மேலும் சில மாதிரிகளின் முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார் மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார் மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அதனையடுத்து அவர் கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.
மறுநாள் அவர்களது குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முதலாவது தொற்றாளரின் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், மூன்றாவது நாளான நேற்று திங்கட்கிழமை மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் மூவர் ஏழாலையும், இருவர் இணுவிலையும் சேர்ந்தவர்கள்.
No comments:
Post a Comment