மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 2 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றது - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 2 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றது

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் விசேட அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.

இவ்வாறு மாநகர சபையின் சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான சபையின் விசேட அமர்வின் ஆரம்பத்தில், இன்று புதிதாக மாநகர சபை உறுப்பினர்களாக கடமையேற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் மாநகர முதல்வரினால் வரவேற்கப்பட்டு, அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாநகர சபை முதல்வரினால், கடந்த அமர்வில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் பல திருத்தங்களை முன்வைத்ததன் காரணமாக அந்த திருத்தங்கள் சேர்க்கப்பட்டு, மீண்டும் வரவு செலவு திட்டம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படுவதாகவும், அவற்றிற்கு ஆதரவு வழங்குமாறு மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்கள் என 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி ஒரு உறுப்பினரும் சுயேட்சை குழுக்களின் மூன்று உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

38 உறுப்பினர்கள் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையில் 20 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும் 18 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேற்படி சபையில் மேலதிக 02 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றது.

சபை நிறைவின் பின்னர் சபைக்கு வெளியே வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களினால் சிறு குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டு பின்னர் சுமூக நிலைக்கு வந்தது. 

இவ்வமர்வினைப் பார்வையிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment