ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் நன்நீர் மீன் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்படுவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குளங்களுக்கு மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு மாவட்டச் செயலாளர் கருணாகரன் தலைமையில் புதன்கிழமை 02.12.2020 இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் உலக உணவு அமைப்பின் நிதியுதவியுடன் மாவட்ட செயலகத்தில் இயங்கி வருகின்ற மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயத்தினுடாக இத்திட்டம் அமுலாகிறது.
முதற்கட்டமாக அடச்சகல் குளத்தில் 60000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. அடச்சகல் குளத்தில் தற்போது 36 குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரமாக முழு நேர மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கு நிலையான நீர் மட்டத்தினை பேணுவதற்கான ஒரு பொறிமுறையினை நடைமுறைப்படுத்தித் தருமாறு மாவட்டச் செயலாளரிடம் உள்ளுர் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கண்டியனாறு குளம் கொக்கன்சேனைக் குளம் நல்லதண்ணீர் ஓடைக்குளம் இரும்பன்ட குளம் அடச்சகல் குளம் ஆகிய பருவகால குளங்களுக்கு கிட்டத்தட்ட 550000 மீன் குஞ்சுகள் விடப்படவுள்ளதாக மாவட்ட நீர் உயிரின வளப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜெகப் நெல்சன் தெரிவித்தார்.
இது உலக உணவு அமைப்பின் ஆர்.5 எனும் திட்டத்தினுடாகவே முன்னெடுக்கப்படுகின்றது போஷனை மட்டத்தினை உயர்த்தும் அடிப்படையில் மக்கள் போஷாக்கான உணவை உண்பதற்காகவே இத்திட்டம் அமைந்துள்ளதாகவும் நெல்சன் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவனீதன் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார் மண்முனை மேற்கு பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சபேஸ். மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
No comments:
Post a Comment