கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணி வழங்கலில் பாரிய முறைகேடுகள் - ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி. சந்திரகுமார் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணி வழங்கலில் பாரிய முறைகேடுகள் - ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி. சந்திரகுமார் கடிதம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காணி சீர்திரத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் பகிர்ந்தளிப்பதில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெரும் செல்வந்தகர்கள், அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள், போன்றவர்கள் தங்களின் செல்வாக்குகளை பயன்படுத்தி பல ஏக்கர் காணிகளை பெறுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கை வரை சென்றுள்ளனர். 

இதற்காக பணப் பரிமாற்றங்களும் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்குகளும் பிரயோகிக்கப்படுவதாகவும் தனது கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டுவந்திருப்பதாகவும், பிரதேசத்தில், மாவட்டத்தில் காணியற்ற அல்லது விவசாயம் மேற்கொள்ள போதிய காணியில்லாத மக்கள் உள்ள போதும் மாவடடத்திற்கு வெளியேயும் மாகாணத்திற்கு வெளியேயும் என பலர் இக்காணிகளை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தான் ஜனாதிபதியின் கவனத்திற்கும், பிரதமர் காணி அமைச்சர், காணி அமைச்சின் செயலாளர், காணி சீர்திருத்த ஆணைக்குவின் தலைவர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் குறித்த கடித்தில் பின்வரும் விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புலோப்பளை கிழக்கு, அல்லிப்பளை, தர்மக்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நிலச் சீர்த்திருத்த ஆணையத்திற்கு (LRC) உரிய காணிகள் உள்ளன. 

அல்லிப்பளை - தட்டுவன்கொட்டித் தோட்டம் ,புலோப்பளை கிழக்கு - முடிச்சுப்பள்ளி, காசிப்பிள்ளை தோட்டம் வெட்டுக்காடு, தர்மக்கேணி - புதுக்காட்டுத் தோட்டம் இந்தக் காணிகளை அந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற காணியற்ற மக்களும் விவசாயச் செய்கை மேற்கொள்வோரும் குடியிருப்புகளை அமைப்பதற்கும் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற வாழ்வாதார முயற்சிகளை மேற்கொள்வதற்குமாக கோரியுள்ளனர். இவர்களுக்கு இவற்றை வழங்குவே பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் இந்தப் பகுதியிலுள்ள வாழ்வில் பின்தங்கிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக வெளியிடங்களிலுள்ள வசதி படைத்தோர் இவற்றைப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறானது என்பதுடன் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானதாகவும் அமையும் அபாயமுள்ளது. 

எனவே இதனைப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரத்துக்கும் நிலமற்றோருக்கான குடியிருப்புக்குமாக வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடித்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment