ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினையை தீர்த்து வைப்பது எமது பொறுப்பு. அதற்குரிய காலம் விரைவில் வரும் மலையக அரசியல் தொடர்பாக எனக்கு சிலர் பாடம் கற்பிக்க முயல்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் மலையக தொழிற்சங்க அரசியலை எனது தந்தையார் காலத்தில் இருந்து கரைத்துக் குடித்தவன் நான். மலையக மக்களின் அடிப்படைத் தேவைகள் முதல் அவர்களது சகல விதமான தேவைகள் குறித்தும் எனக்கு நன்கு தெரியும். எனவே நான் சிறியவன், அனுபவம் போதாது அல்லது கத்துக்குட்டி என நினைத்து எவரும் எனக்கு பாடம் கற்பிக்க முனைய வேண்டாம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
1000 ரூபா சம்பளம் எப்போது சாத்தியமாகும் என கேட்டபோது அவர் இந்த கருத்தினை தெரிவித்தார். என்னைப் பொறுத்த வரையில் நாங்கள் சொல்வதைதான் செய்வோம். வெறுமனே அரசியலுக்காக வாய் சவால்களை விடுபவர்கள் அல்ல நாம்.
செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும், முகநூல்களிலும் போலியான வாதப்பிரதிவாதங்களை நடத்தி அரசியல் செய்பவர்கள் இதனை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய தொழிற்சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வந்துள்ளமை சரித்திரமாகும்.
அவ்வப்போது தோன்றி முளைக்கும் சில தொழிற்சங்கங்களும் சில மலையக அரசியல்வாதிகளும் எமது தொழிற்சங்கத்தை சவால் விடும் வகையில் செயற்பட்டு காணாமலே போய் உள்ளனர். இதுவே வரலாறு. எனவே நிலவைப் பார்த்து ஏதோ குரைப்பது போல் எமது செயற்பாடுகளை எவராலும் தடுத்து விட முடியாது.
1000 ரூபா சம்பள பிரச்சனையை தீர்த்து வைப்பது எமது பொறுப்பு. அதற்குரிய காலம் விரைவில் வரும். அதற்குரிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது. எனவே அது தொடர்பாக எதுவுமே செய்ய முடியாதவர்கள் தேவையற்ற பிரசாரத்தில் ஈடுபட்டு தமது நேரத்தையும் காலத்தையும் வீணடிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிலர் நான் சிறுவன் கத்துக்குட்டி தொழிற்சங்க அனுபவம் அற்றவன் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அது தவறு நான் எனது தந்தையார் காலத்திலிருந்தே தொழிற்சங்க அனுபவங்களை நிறையவே பெற்றுள்ளவன்.
எனவே அவ்வாறு கூறுபவர்கள் தமது கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என ஜீவன் தொண்டமான் கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார்.
எஸ். சுரேஷ்
No comments:
Post a Comment