கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருந்த பல பிரதேசங்கள் நேற்றுக் காலை திறக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஆறு மாடி வீட்டுத் தொகுதிகள் சில நேற்றுக் காலை 6 மணி முதல் திறக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கிணங்க மட்டக்குளி ரண்திய உயன, முகத்துவாரம் பிரதேசத்தில் மென்சந்த செவன, மிஹிஜய செவன, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் முவதொர உயன, சமகிபுர, தெமட்டகொடை பிரதேசத்தில் மிகிந்து செத்புர ஆகிய பிரதேசங்களிலுள்ள மாடி வீட்டுத் தொகுதிகளே தனிமைப்படுத்தல் முடக்கத்தில் இருந்து நேற்று திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் மேலும் ஏழு மாடி வீட்டுத் தொகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் ஓரிரு தினங்களில் அவற்றையும் திறக்க முடியும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கடந்த 7ஆம் திகதி மென்சந்த செவன மாடி வீட்டுத் தொகுதியில் 986 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 86 பேர் வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அதே போன்று மட்டக்குளி ரண்தியஉயன மாடி வீட்டுத் தொகுதியில் 1264 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது 40 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
அத்துடன் முகத்துவாரம் மிஹிஜய செவன மாடி வீட்டுத் தொகுதியில் 554 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 78 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் முவதொர உயன மாடி வீட்டுத் தொகுதியில் 870 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 24 வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
சமயபுர மாடி வீட்டுத் தொகுதியில் 260 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் இருவர் வைரஸ் தொற்று நோயாளர்களளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மிகிந்து செத்புர மாடி வீட்டு தொகுதியில் 840 வீடுகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வைரஸ் தொற்று நோயாளிகள் 34 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கிணங்க வைரஸ் தொற்று நோயாளிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
அந்த நிலையில் மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மேற்படி மாடி வீட்டுத் தொகுதிகளில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் முடக்கத்திலிருந்து திறக்கப்பட்டுள்ளன.
மேலும் 7 மாடி வீட்டுத் தொகுதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு நிலைமையை கண்காணித்து அந்தப் பிரதேசங்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்படும்.
இதுவரை தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டு இருந்த மாடி வீட்டுத் தொகுதிகளில் மூன்றில் இரண்டு வீதமான மக்கள் மேற்படி பகுதிகளிலேயே வசித்தனர். அதற்கிணங்க மேலும் மூன்றில் ஒருவீதமான மக்களே ஏனைய ஏழு மாடி வீட்டு தொகுதிகளிலும் வசிக்கின்றனர்.
அதற்கிணங்க இன்னும் ஓரிரு தினங்களில் அந்த பகுதியையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment