ரொஹிங்கிய அகதிகளை ஆபத்தான தீவுக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பம் - ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

ரொஹிங்கிய அகதிகளை ஆபத்தான தீவுக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பம் - ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு

வெள்ளம் மற்றும் சூறாவளிகளால் மோசமாக பாதிக்கப்படக் கூடிய தாழ்வான தீவு ஒன்றுக்கு ரொஹிங்கிய அகதிகளை அனுப்பும் நடவடிக்கையை பங்களாதேஷ் ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக பல நூறு அகதிகளை அனுப்பும் ஏற்பாடுகளை பங்களாதேஷ் அரசு நேற்று மேற்கொண்டது. இதற்கு ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இராணுவ தாக்குதல் ஒன்றை அடுத்து அண்டை நாடான மியன்மாரில் இருந்து 2017 இல் தப்பி வந்த சுமார் ஒரு மில்லியன் ரொஹிங்கிய அகதிகள் தற்போது தென் கிழக்கு பங்களாதேஷின் மோசமான நிலையில் இருக்கும் மிகப்பெரிய அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தமது பாதுகாப்பு மற்றும் உரிமையை தரும் வரை மியன்மார் திரும்ப பலரும் மறுத்து வருகின்றனர். எனினும் அகதி முகாம்களில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் போதைக் கடத்தல் கும்பல்களால் அந்த முகாம்களை அகற்றுவதற்கு பங்களாதேஷ் அரசு முயன்று வருகிறது.

இந்நிலையில் கொக்ஸ் பசார் பிராந்தியத்தில் இருக்கும் முகாம்களில் இருந்து குறைந்தது 10 பஸ் வண்டிகள் சிட்டகொங் துறைமுகத்தை நோக்கி நேற்று பயணத்தை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘சுமார் 400 பேரை ஏற்றிய பத்து பஸ் வண்டிகளை தீவை நோக்கிச் சென்றன’ என்று உள்ளூர் பொலிஸ் தலைவர் அஹமது சுன்ஜுர் மொர்சத் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். சிட்டகொங் துறைமுகத்தில் இருந்து இந்த அகதிகள் இராணுவப் படகுகள் மூலம் பசான் சார் தீவுக்கு இன்று அழைத்துச் செல்லப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

52 சதுர கிலோ மீற்றர் பகுதி கொண்ட பசான் சார் தீவில், பிராந்தியத்தில் அடிக்கடி ஏற்படும் சூறாவளியால் நான்கு, ஐந்து மீற்றர் உயரத்திற்கு வெள்ளம் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தத் தீவில் 100,000 பேருக்காக வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகவும் கடல் அமைதியாக இருக்கும் நவம்பர் தொடக்கம் ஏப்ரல் வரையான வரண்ட பருவத்தில் அவர்களை குடியமர்த்துவதற்கு நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது என்றும் பங்களாதேஷ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த குடியமர்த்தல் தொடர்பான போதிய தகவல்களை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஐ.நா, இதற்கான ஏற்பாடுகளில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் குறுகிய பார்வை கொண்டது என்றும் மனிதாபிமானம் அற்றது என்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச அகதிகள் குழு தெரிவித்துள்ளது.

“மசான் சாருக்கு அதிக அகதிகளை இடம்பெயரச் செய்வதை நிர்வாகம் உடன் நிறுத்த வேண்டும்” என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான பிரச்சாரகர் சாத் ஹம்மாதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment