புரவி எனும் சூறாவளி தாக்கம் அனர்த்தமாக மாறும் என வளிமண்டவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலை அடுத்து திருகோணமலையில் உள்ள மக்களும் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக கரையோர பிரதேச மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இரவு வேளைகளில் பலத்த காற்றுடன் ஓரளவு மழை பெய்தமையும் திருகோணமலை மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இருப்பினும் பல பிரதேசங்களில் வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
திருகோணமலையை அண்டிய கடற் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பும் பாரிய அலையும் வழமைக்கு மாறாக ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருகோணமலை மாவட்ட செயலகம் ஊடாக பல முன்னெடுப்புக்கள் தற்போது வரை இடம்பெற்று வருகிறது.
மேலும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணி நேர சேவையில் ஈடுபட்டு வருகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா, மூதூர், குச்சவெளி, தம்பலகாமம், திருகோணமலை உள்ளிட்ட 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களுக்காக பிரதேச செயலாளர் ஊடாக முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வீதி ஓரங்களில் மழை காரணமாக நீர் வடிந்தோட முடியாமலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்கு வரத்து தடைகளும் ஏற்பட்டுள்ளன.
இதனால் உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள், முப்படையினர்கள் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கு மேலதிகமாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளை ஊடாகவும் மருத்துவ மற்றும் முதலுதவி சேவைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment