வவுனியாவை கடந்து சென்றது புரெவி புயல் - 68 குடும்பங்கள் பாதிப்பு - வைத்தியசாலை, விவசாய காணிகள் நீரில் மூழ்கின - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

வவுனியாவை கடந்து சென்றது புரெவி புயல் - 68 குடும்பங்கள் பாதிப்பு - வைத்தியசாலை, விவசாய காணிகள் நீரில் மூழ்கின

புரெவி புயல் தாக்கம் காரணமாக வவுனியா வடக்கில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புரெவி புயல் நேற்று நள்ளிரவு வவுனியாவைக் கடந்தது. இதன் காரணமாக நேற்று காலையில் இருந்து வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் சொத்தழிவுகளை தடுக்கும் வகையில் மாவட்ட செயலகத்துடன் இணைந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இதனடிப்படையில் அனர்த்தம் நிகழக் கூடிய தற்காலிக வீடுகள் மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் தங்கியிருந்த 68 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயலின் தாக்கம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இரு தினங்களுக்கு காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா. சதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வங்களா விரிகுடாவில் மையம் கொண்ட புரெவி சூறாவளியானது குச்சவெளியூடாக இலங்கையின் கரையை கடந்து தற்போது யாழ்ப்பாணத்தினை மையம் கொண்டு மன்னார் ஊடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதன் வேகமானது மணிக்கு 60 - 80 கிலோ மீற்றர் காணப்படலாம். குச்சவெளியூடாக யாழ்ப்பாணம் சென்றதினால் வவுனியா மாவட்டத்தில் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 71.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதுடன் இந்த சூறாவளியின் தாக்கமானது வவுனியாவில் குறைந்தளவு காணப்பட்டாலும் நாளையதினம் வெள்ளிக்கிழமை மாலை வரையில் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு தினங்களுக்கு வவுனியாவில் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுவதினால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பாடுமாறும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா. சதானந்தன் மேலும் தெரிவித்தார்.

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரெவி” புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புயல் வவுனியாவின் ஒரு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று காலை முதல் வவுனியா மாவட்டத்தில் இடைவிடாது கன மழை பெய்து வந்ததுடன், நேற்றையதினம் இரவு முதல் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்து வருகின்றது.

கடும் காற்று காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் அங்கு வசிக்கும் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன மழை காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் 68 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் தமது உறவினர் வீடுகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

இதேவேளை, இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு முன்பாக இருந்த மரம் ஒன்று வேரோடு முறிந்து வீதியில் வீழ்ந்துள்ளதுடன், சாந்த சோலைப்பகுதி மற்றும் புளியங்குளம் நெடுங்கேணி பிரதான வீதியில் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்து வீதியின் குறுக்காக விழுந்துள்ளன.

இதனால் குறித்த வீதிகளுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், சில மணி நேரங்களின் பின்னர் அது வழமைக்கு திரும்பியிருந்தது.

நேற்று காலையில் இருந்து பெய்து வரும் கன மழை காரணமாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன், வைத்தியசாலையின் மதிலும் உடைந்து விழுந்துள்ளது.

குறிப்பாக மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதுடன், விவசாய காணிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையான காலப்பகுதியில் வாகன சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய பாதிப்புக்கள் தொடர்பாக பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இதேவேளை, புயல் சின்னம் இலங்கையின் கரையை கடந்திருந்தாலும் எதிர்வரும் இரண்டு தினங்களிற்கு மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment