பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் ஓரளவு தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்தக்கூடிய சாத்தியம் - சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூசா நக்பர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் ஓரளவு தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்தக்கூடிய சாத்தியம் - சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூசா நக்பர்

கொவிட் தொற்றாளர்களின் தொகை நாளுக்கு நாள் மிகவும் கூடுதலாக அதிகரித்து வந்ததால் அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அக்கரைப்பற்றில் கடந்த மூன்று நாட்களாக கணிசமான முன்னேற்றம் காணப்படுவதால் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் ஓரளவு தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்தக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூசா நக்பர் தெரிவித்தார். 

இது முழுக்க முழுக்க பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 26ந் திகதியிலிருந்து அமுலில் இருந்து வரும் அக்கறைப்பற்றில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகள் ஆச்சரியமளிக்குமளவு அதிகரித்து இருந்தது. இப்பகுதி மக்களை ஒரு உலுக்கு உலுக்கியது. 

முடக்கப்பட்ட மக்கள் மிகவும் கலங்கினர். விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள், கூலிதொழிளாளர்கள் என சகலரும் முடங்கிக்கிடந்தனர். அரச, தனியார் ஊழியர்கள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக எடுக்கப்பட்ட பீ.சி.ஆர், அண்ரிஜன் முடிவுகள் ஓரளவு திருப்தியளிக்கக்கூடியதாக இருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூசா நக்பர் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்தல், கொரோனா வைரசை ஒழித்தல் ஆகியன முற்றாக பொது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எவ்வளவுதான் வைத்தியர்களோ அல்லது பாதுகாப்பு படையினரோ முயன்றாலும் அவை ஒருபோதும் சாத்தியப்படமாட்டாது. 

எனவே, நாம் தனிமைப்படுதல் ஊரடங்கை சரியாகப் பேணுவோம், கொரோன வைரசை ஒழிப்பதற்கான சுகாதார வழிமுறைகளை கடைபிடிப்போம். கொரோனாவை ஒழிப்போம். இதைவிடுத்து வைத்தியரையோ அல்லது பாதுகாப்பு படையினரையோ விமர்சிப்பதில் எவ்வித பிரயோசனமுமில்லை” என்றார்.

அவரது உருக்கமான வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த நவம்பர் 26 முதல் காலவரையின்றி இன்றோடு பத்தொன்பது நாளாக அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவில் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் இப்பிரதேசம் முடங்கி கிடக்கின்றமை கவலைக்குரியது. 

பொதுமக்களின் அசிரத்தை காரணமாக நிலைமைகள் மோசமாகின. அக்கரைப்பற்று வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை மொத்தம் 274 பேருக்கு கொரோன வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அக்கரைபற்று பொதுச்சந்தையோடு தொடர்புபட்டவர்களே. 

பீ.சீ.ஆர் முடிவுகள் இன்னும் வரவேண்டியும் உள்ளன. இப்பிரிவின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டப்பட்ட பீ.சி.ஆர். சோதனையின்போது இவ்வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் அக்கரைப்பற்று சந்தையோடு தொடர்பு பட்டவர்களாகவே இருக்கின்றனர். எனவே சந்தை சதுக்கத்தோடு தொடர்புடையர்வர்கள் அனைவரும் பீ.சி.ஆர். சோதனைகள் எடுத்தாக வேண்டும். இங்கு இதுவரை 3600 பேர் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மனிதாபிமான அடிப்படையில் சில சலுகைகளை வழங்கும்போது அவற்றை மிகவும் கண்ணியமான முறையில் பாவிக்கவேண்டும். இதனை உதாசீனப்படுத்தும்போதே நாம் சட்டங்களை இறுக்கமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

டாக்டர் பரூசா நக்பர் தொடர்ச்சியாக நடைபெறும் பரிசோதனைகளுக்கு ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொண்டதோடு வயோதிபர்கள், நீண்ட நாள் நோயாளிகளில் விஷேட கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

* நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் அவர்களை பராமரியுங்கள்!

* நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை வழங்குங்கள்.

*அவர்களுக்கான மருந்து வகைகளை தவறாமல் கொடுங்கள்.

* அவர்களை பராமரிக்க, குடும்பத்தில் உள்ள ஒருத்தரை மட்டும் நியமிப்பதோடு, அவர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துங்கள்” என்றும் அவர் வேண்டினார்.

அட்டளைச்சேனை நிருபர்

No comments:

Post a Comment