மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தொழில் இல்லாத பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பில் கைத்தொழில் சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கின்றது. இதன் மூலம் இப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வசதிகிட்டவுள்ளது.
இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மகளிர் மகாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரன் தொடர்ந்தும் கருத்து வழங்குகையில், புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய மக்களின் பொருளாதாரத்தை விருத்தி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்மொழிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இதனடிப்படையில் பின்தங்கிய கிராமங்களில் யுத்தத்தால் இழந்த பகுதி உட்பட, பின்தங்கிய கிராமங்களில் மேம்பாட்டை ஏற்படுத்தும் இராஜாங்க அமைச்சரான நான், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராம மக்களின் அபிவிருத்தி பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு திட்டங்களை அமுலாக்கவுள்ளேன்.
மக்களின் தேவைகளை அறிந்து காலடிக்கு சென்று சேவைசெய்வது சிறந்த பண்பாகும். இதனடிப்படையில் எதிர்காலத்தில் மகளிரின் வளர்ச்சி கருதி இந்த அரசாங்கத்தின் ஊடாக பல்வேறு முன்னேற்றகரமான அபிவிருத்தித் திட்டங்களை அமுல் நடத்த இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
இந்த மகளிர் மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி காந்தரூபி சந்திரகுமார் உட்பட பட்டிருப்பு தொகுதியில் அடங்கும் பொதுஜன முன்னணியின் கிராமப்புற அமைப்பாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மட்டக்களப்பு நிருபர்
No comments:
Post a Comment