முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் - சுகாதார அமைச்சருக்கு அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் - சுகாதார அமைச்சருக்கு அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை எச்சரிக்கை

(நா.தனுஜா )

இலங்கை மருத்துவ சபையின் தலைவரையோ உறுப்பினர்களையோ தாம் நினைத்தவாறு பதவிகளிலிருந்து நீக்குவதற்கு எவராலும் முடியாது. அவ்வாறான முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று சுகாதார அமைச்சரிடம் கேட்டுக் கொள்ளவதாக அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவர் வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மருத்துவ சபை என்பது வெறுமனே மருத்துவர்கள் மாத்திரமன்றி, சுகாதாரத் துறைசார் பணியாளர்களையும் பதிவுசெய்து கொண்டிருக்கும் ஓர் கட்டமைப்பாகும். 

எனவே 1924 ஆம் ஆண்டில் விசேட பாராளுமன்றத் தீர்மானமொன்றின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு சுயாதீனமானதாகும். எனினும் அதன் தற்போதைய நிலை மிகவும் மோசமானதாக இருக்கின்றது.

இந்நாட்டின் சுகாதார சேவையின் தலைவராகவே இலங்கை மருத்துவ சபையின் தலைவர் கருதப்படுகின்றார். அதேபோன்று அதன் தலைவரையோ உறுப்பினர்களையோ தாம் நினைத்தவாறு பதவிகளிலிருந்து நீக்குவதற்கு எவராலும் முடியாது.

எனவே அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு முன்னர் பதவி வகித்த எந்தவொரு சுகாதார அமைச்சரும் தற்போதைய அமைச்சரைப்போன்று தன்னிச்சையாக செயற்படவில்லை. 

எனவே மருத்துவ சபை என்பது அரசியலை மையப்படுத்திய ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment