(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரம் அரசாங்கம் சடலங்களை அடக்கம் செய்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மனித உரிமையை பாதுகாக்க தவறிய குற்றச்சாட்டுக்கு ஆளாகி சர்வதேச மட்டத்தில் எமது நாடு தனிமைப்படுத்தப்படும் ஆபத்து இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அரசாங்கம் முறையான தீர்மானம் ஒன்றை எடுக்கும் என்பதற்காக இது தொடர்பில் நாங்கள் பொறுமையாக இருந்தோம்.
உலக சுகாதார அமைப்பு பல தலைசிறந்த ஆய்வாளர்களின் நிலைப்பாடுகளை கருத்திற்கொண்டே தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கியிருந்தது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை உலகில் 194 நாடுகளுக்கும் அதிக நாடுகள் இதனை அனுமதித்துள்ளன.
அதேபோன்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களின் பிரகாரம் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து பல சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் அரசாங்கத்தை கேட்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கத்திடம் இருந்து இதுவரை முறையான பதில் இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
அத்துடன் கொவிட் காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தி இருந்தால், அப்போது அதன் பாதிப்பு தொடர்பாக நாங்கள் விளங்கிக் கொண்டு செயற்பட முடியுமாக இருந்திருக்கும்.
ஆனால் அவ்வாறு எதுவும் இல்லாத நிலையில், இந்த விடயம் தொடர்பில் குரல் எழுப்புபவர்களை அடக்குவதற்கும் அவர்களுக்கு இனவாத சாயம் பூசுவதற்கும் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு சில ஊடகங்களும் உடந்தையாக இருந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
முழு உலக நாடும் உலக சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் செயற்படும்போது எமது நாடு மாத்திரம் சடலங்களை எரிப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேச மட்டத்தில் எமது நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துகின்றது.
அதேபோன்று மனித உரிமைகளை பாதுகாக்க தவறும் நாடு என தெரிவித்து சர்வதேச ரீதியில் எமது நாடு தனிமைப்படுத்தப்படும் ஆபத்து இருக்கின்றது. இந்த நிலையில் இருந்து நாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment