தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாதென்பதை அரசாங்கம் நிரூபிக்கிறது - சிவசக்தி ஆனந்தன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாதென்பதை அரசாங்கம் நிரூபிக்கிறது - சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியைத்தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று சேமமடு, செட்டிகுளம், ஒதியமலை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் சேமமடு, செட்டிகுளம், ஒதியமலை ஆகிய மூன்று கிராமங்களுக்குள் அதிகாலையில் புகுந்து அப்பாவி தமிழ் பொதுமக்களை கைது செய்தது மட்டுமன்றி சுட்டும், வெட்டியும் கொலை வெறித்தாக்குதலை நடத்தியிருந்தனர்.

சேமமடு பகுதியில் 52 பேரும், ஒதியமலை பகுதியில் 32 பேரும், செட்டிகுளம் பகுதியில் 22 பேரும், மொத்தமாக 106 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களும் வறிய விவசாய குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களுமாவர்.

இப்படுகொலை நினைவு நாள் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்பட்டு உயிர் நீத்த ஆன்மாக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் உறவினர்களும், அப்பிரதேச வாசிகளும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நாள் இன்றாகும் (02-12-2020) வழமைபோன்று உயிர் நீத்த உறவுகளின் நினைவாக வருடாந்த நினைவேந்தலை செய்வதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் செட்டிகுளம் பகுதியில் பொலிஸார் திடீரென பிரசன்னமாகி நினைவேந்தலுக்கு தடை விதித்ததோடு, உயிர் நீத்த உறவுகளை நினைவேந்த அனுமதிக்க முடியாது என்று எச்சரித்து சென்றிருக்கின்றார்கள்.

கடந்த வாரம் உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலே நீதிமன்றத்தினுடாக பொலிஸார் தடைத்தரவு பெற்றிருந்தனர். 

இதேபோல் இக்கிராம மக்களும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு தங்களின் சமய காலாச்சார முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை கூட செய்ய முடியாத துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் நல்லிணக்கம் வர வேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக உயிர் நீத்தவர்களுக்கான கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். 

அதை விடுத்து இவற்றை செய்யாத வரை எந்த காலத்திலும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியைத்தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment