(இராஜதுரை ஹஷான்)
ரயில் போக்கு வரத்து சேவை கொவிட்-19 வைரஸ் பரவலின் மூன்றாவது கொத்தணியாக மாறும் சூழ்நிலையே தற்போது காணப்படுகிறது.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தும் திட்டங்களை ரயில் திணைக்களம் செயற்படுத்தவில்லை. ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வேளையில் அத்தியாவசிய சேவை நிமித்தம் ரயில் போக்கு வரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கும், ரயில் நிலையத்தில் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
பாதுகாப்பற்ற முறையில் ரயில் போக்கு வரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொம்பனி தெரு ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ரயில் நிலைய சேவையாளர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
கொம்பனி வீதி ரயில் நிலையத்தில் இருந்து பயணித்த பயணிகளின் பாதுகாப்பு அவதான நிலையில் உள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவலின் மூன்றாவது கொத்தணியாக ரயில் சேவை மாறும் தன்மை காணப்படுகிறது.
சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எவ்வித திட்டங்களும் ரயில் திணைக்களம் இதுவரையில் வகுக்கவில்லை. ரயில் சேவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment